நாடு முழுவதும் கொரோனா மற்றும் அதன் உருமாறிய தொற்றான ஒமைக்ரான் மிக வேகமாக பரவி வருகிறது. இதனால் நாட்டின் பல்வேறு மாநிலங்களில் கட்டுப்பாடுகளுடன் கூடிய இரவு நேர ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில் சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோர் ஏற்கனவே செலுத்திக்கொண்ட தடுப்பூசியையே மீண்டும் 3-வது தவணையாக அவர்களுக்கு செலுத்தப்படும் என்று மத்திய அரசு தெரிவித்துள்ளது.
நாடு முழுவதும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்ட 60 வயதுக்கு மேற்பட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் 3-வது தவணையாக பூஸ்டர் டோஸ் தடுப்பூசி செலுத்தப்படும் என்று கடந்த டிசம்பர் மாதம் பிரதமர் மோடி அறிவித்திருந்தார். இந்நிலையில் பயனாளர்கள் ஏற்கனவே 2 தவணைகளாக செலுத்திக்கொண்ட தடுப்பூசியையே 3-வது தவணையின் போது செலுத்துவதா அல்லது வேறு தடுப்பூசி செலுத்துவதா என்பது குறித்து மத்திய அரசு ஆலோசனை செய்து வந்தது.
இது தொடர்பாக மத்திய அரசின் கீழ் செயல்படும் நீதி ஆயோக் அமைப்பின் உறுப்பினர் வி. கே.பால் டெல்லியில் புதன்கிழமையன்று செய்தியாளர்களிடம் பேசியதாவது, சுகாதாரப் பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் பல்வேறு நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 மற்றும் அதற்கு மேற்பட்ட வயதுடையவர்கள் ஏற்கனவே செலுத்தி கொண்ட தடுப்பூசியையே மீண்டும் 3-வது தவணையாக அவர்களுக்கு செலுத்தப்படும். மேலும் சுகாதார பணியாளர்கள், முன்களப்பணியாளர்கள் உள்ளிட்டோருக்கு ஜனவரி 10-ஆம் தேதி முதல் தடுப்பூசியின் 3-வது தவணையை செலுத்துவதற்கான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன என்று அவர் தெரிவித்துள்ளார்.