தமிழகத்தில் ஜனவரி 11ஆம் தேதி வரை 50 சதவீத இருக்கைகளுடன் மட்டுமே திரையரங்குகள் இயங்க வேண்டும் என நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அதனால் மக்களின் வாழ்வாதாரம் பெரிதும் பாதிக்கப் பட்டதால், ஊரடங்கு தளர்வு களை தமிழக அரசு அறிவித்து வருகிறது. இந்நிலையில் கடந்த 8 மாதங்களாக திறக்கப்படாமல் இருந்த திரையரங்குகள் அனைத்தும் 50 சதவீத இரு கைகளுடன் திறப்பதற்கு தமிழக அரசு கடந்த மாதம் அனுமதி வழங்கியது. அதன் பிறகு நடிகர் விஜய் மற்றும் சிம்புவின் அடுத்தடுத்த படங்கள் திரைக்கு வர இருப்பதால், விஜய் மற்றும் சிம்பு ஆகிய நடிகர்கள் தமிழக அரசிடம் கோரிக்கை வைத்தனர்.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைகளுக்கு அனுமதி அளித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. இதனையடுத்து திரையரங்குகளில் 100 சதவீத இருக்கைக்கு தமிழக அரசு அனுமதி அளித்திருப்பது விதிமீறல்,உடனடியாக இந்த உத்தரவைத் திரும்பப் பெற வேண்டும் என்றும் 50 சதவீத இருக்கைக்கு அனுமதி என்ற வழிகாட்டுதலை பின்பற்ற வேண்டும் எனவும் தமிழக அரசுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.
இந்நிலையில் திரையரங்குகளில் 100 சதவித இருக்கைகளுக்கு அனுமதி அளித்து வெளியான அரசாணையை ரத்து செய்யக் கோரி மதுரை ஐகோர்ட்டு கிளையில் மனு தாக்கல் செய்யப்பட்டது. அதன் விசாரணையில், சரியான முறையில் மறுபரிசீலனை செய்து முடிவெடுத்து ஜனவரி 11 ஆம் தேதிக்குள் பதில் அளிக்கவும், அதுவரை 50 சதவீத இருக்கைகளோடு திரையரங்குகளை இயக்கவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. மேலும் கொரோனா காலத்தில் பொருளாதார சிக்கல்களுக்கு அதி முக்கியத்துவம் தர இயலாது என்றும், காட்சிகளை அதிகப்படுத்துவது தொடர்பாக பரிசீலிக்கவும் அறிவுறுத்தியுள்ளது.