சென்னை அருள்மிகு வடபழநி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு நடைபெறுவதை முன்னிட்டு பாலாலயம் நிகழ்ச்சி கடந்த புதன்கிழமை அன்று நடைபெற்றது. இதில் அமைச்சர் திரு.பி.கே. சேகர்பாபு மற்றும் திருக்கோவில் தக்கார் ஆதிமூலம் ஆகியோர் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில் பேசிய அமைச்சர், சென்னையில் உள்ள வடபழனி ஆண்டவர் திருக்கோயில் குடமுழுக்கு வருகின்ற 23ஆம் தேதி நடைபெற உள்ளது. இதற்காக மொத்தம் 108 யாகசாலைகள் அமைக்கப்பட்டுள்ளது. குடமுழுக்கு நடைபெற 90% செலவினை நன்கொடையாளர்கள் மூலம் பெற்று திருப்பணிகள் துரிதமாக செய்யப்பட்டு வருகிறது.
மேலும் முதல்வரிடம் ஆலோசனை செய்து கொரோனா கட்டுப்பாட்டு விதிகளை முழுவதும் கடைபிடித்து இந்த குடமுழுக்கு நடைபெறும். அதனைத் தொடர்ந்து தமிழகத்தில் உள்ள திருக்கோயில்களில் ஆகம விதிப்படி 12 ஆண்டுகள் முடிவுற்றும் திருப்பணிகள் நடைபெற உள்ள கோயில்கள் மற்றும் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு வரும் கோவில்களில் குடமுழுக்கு நடைபெறாமல் நிலுவையில் உள்ள திருக்கோவில்களை கணக்கில் எடுத்துக்கொண்டு அதற்கான பணிகளை விரைந்து முடித்திட தீவிர நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.
அதன்படி தமிழகத்தில் 675 திருக்கோயில் திருப்பணிகளை மேற்கொள்ள முதல்வர் ஸ்டாலின் உத்தரவிட்டுள்ளார் மேலும் திருப் பணிகள் மேற்கொள்ளப்பட உள்ள திருக்கோயில்கள் எவை, எந்த திருப்பணிகள் மேற்கொள்ளப்பட உள்ளது என்று அனைத்து விவரங்களையும் இந்து சமய அறநிலை துறை இணையதளத்தில் பொதுமக்கள் அனைவரும் பார்க்கும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது. எனவே பக்தர்கள், பொதுமக்கள் மற்றும் திருக்கோயில் ஊழியர்கள் ஆகியோர்கள் திருப்பணிகள் ஏதாவது நடைபெறாமல் இருந்தால் உடனடியாக எங்களுக்கு தகவல் அளிக்கலாம் என்று அவர் தெரிவித்துள்ளார்.