தமிழகத்தில் கொரோனா பரவலை கட்டுப்படுத்தும் விதமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதன்படி தற்போது வரை நான்கு மாபெரும் மெகா தடுப்பூசி முகாம்கள் நடத்தப்பட்டுள்ளன. இது குறித்து பேசிய சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்ரமணியன், தமிழகத்தில் வருகின்ற பத்தாம் தேதி ஞாயிற்றுக்கிழமை ஐந்தாவது மெகா தடுப்பூசி முகாம் நடைபெற உள்ளது. தற்போது 50,12,159 தடுப்பூசிகள் கையிருப்பில் உள்ளன.
இதுவரை மொத்தம் 25 லட்சம் பேர் இரண்டாவது தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ளாமல் உள்ளனர். தமிழகத்தில் விருதுநகர் மாவட்டத்தில் 88 சதவீதம் பேருக்கும், தென்காசியில் 83 சதவீதம், சென்னையில் 82 சதவீதம் பேருக்கும், மதுரையில் 79 சதவீதம், தேனியில் 75 சதவீதம் பேருக்கும் நோய் எதிர்ப்பு சக்தி அதிகரித்து உள்ளது. மேலும் கரூர், நீலகிரி, அரியலூர் மற்றும் பெரம்பலூர் ஆகிய மாவட்டங்களில் மட்டும் 60 சதவீதத்திற்கும் குறைவான அளவில் நோய் எதிர்ப்பு சக்தி உள்ளது.
அதன்படி தமிழகத்தில் சராசரியாக 70 சதவீதம் பேருக்கு நோய் எதிர்ப்புசக்தி அதிகரித்துள்ளது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ள நான்கு மாவட்டங்களுக்கு தடுப்பூசி பணிகளை மேம்படுத்த அதிக அளவில் கொரோனா தடுப்பூசி வழங்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.