தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக கொரோனா தொற்று காரணமாக பள்ளிகள் மூடப்பட்டு மாணவர்கள் ஆன்லைன் வாயிலாக பயின்று வந்தனர். இதனிடையில் ஒவ்வொரு வருடமும் கிராமப்புறம் மாணவர்களை ஊக்குவிக்கும் அடிப்படையில் ஊரக திறனாய்வுத் தேர்வு திட்டத்தின் கீழ் கல்வி உதவித்தொகையானது வழங்கப்பட்டு வருகிறது. இந்த திட்டத்தின் கீழ் ஒவ்வொரு மாவட்டத்திலும் தலா 50 மாணவ-மாணவிகள் தேர்வு செய்யப்பட்டு வருடத்துக்கு ரூபாய் 1000 என்று 4 ஆண்டுகள் உதவித் தொகை வழங்கப்படும்.
இந்த தேர்வை ஊரகப் பகுதிகளிலுள்ள அரசு அங்கீகாரம் பெற்ற பள்ளிகளில் 8ஆம் வகுப்பு பயிலும் மாணவ-மாணவிகள் தேர்வு எழுதலாம். ஆனால் பெற்றோரின் ஆண்டு வருமானம் ரூபாய் 1 லட்சத்துக்கு மிகாமல் இருக்கும் மாணவர்கள் இந்த உதவித்தொகை பெற தகுதி உடையவர்கள் ஆவார்கள். கடந்த 2021-22ம் வருடத்துக்கான திறனாய்வு தேர்வு கொரோனா தொற்று தாக்கம் அதிகமாக இருந்ததால் ஒத்திவைக்கப்பட்டது.
தற்போது கொரோனா தொற்று பரவல் கட்டுக்குள் வந்து பள்ளிகள் வழக்கம்போல் இயங்கி வருவதால் திறனாய்வு தேர்வை வரும் 27-ம் தேதி நடத்தலாம் என்று தேர்வுத்துறை அறிவிப்பு வெளியிட்டுள்ளது. இந்நிலையில் இந்த தேர்வு தொடர்பாக அரசு தேர்வு துறை இயக்குனர் சேதுராம வர்மா வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், ஊரக திறனாய்வு தேர்வுக்கு விண்ணப்பித்த மாணவர்களின் பட்டியல் www.dge.tn.gov.in என்ற இணையதளத்தில் வரும் 21ஆம் தேதி வெளியிடப்படும் என்றும் தேர்வு மைய கண்காணிப்பாளர்கள் இந்த பட்டியலை பதிவிறக்கம் செய்யலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஆகவே தேர்வுக்கான ஹால் டிக்கெட்டை பள்ளி தலைமை ஆசிரியர்கள் 21ஆம் தேதி பிற்பகல் முதல் தேர்வுத்துறை இணையதளத்தில் பதிவிறக்கம் செய்யலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் தலைமை ஆசிரியர்கள் ஹால் டிக்கெட்டை மாணவர்களுக்கு முன்கூட்டியே வழங்கி, தேர்வுக்கான அறிவுரையை வழங்க வேண்டும். அதில் மாணவர்களின் பெயர் மற்றும் பிறந்த தேதியில் திருத்தம் இருந்தால், அதை சிவப்பு நிற மையால் அழித்து, சரியான பதிவை குறிப்பிட்டு தலைமை ஆசிரியர்கள் சான்றொப்பமிட வேண்டும் என்று அந்த அறிவிப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது.