தமிழகத்தில் கடந்த 2 வருடங்களுக்கு பிறகு தற்போது பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல் செயல்பட்டு வருகிறது. தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. அதன் பிறகு அரசுப் பள்ளியில் படிக்கும் மாணவர்களுக்காக தமிழக அரசு கல்வி என்ற தொலைக்காட்சி சேனலை தொடங்கி மாணவர்களின் கல்வித் திறனை ஊக்கப்படுத்தியது. இந்நிலையில் தமிழகத்தில் கொரோனா காலத்திற்கு பிறகு அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகரித்துள்ளதால், பள்ளிகளின் தரத்தை உயர்த்துவதற்கும் மாணவர்களின் கல்வி தரத்தை மேம்படுத்துவதற்கும் தமிழக அரசு பல்வேறு விதமான முயற்சிகளை எடுத்து வருகிறது.
அந்த வகையில் 9 முதல் 12-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளி கல்வித்துறை ஒரு புதிய திட்டத்தை தொடங்கியுள்ளது. அதன்படி மாணவர்களிடையே தொழில் முனைவோர் மனப்பான்மையை வளர்ப்பதற்காக ‘பள்ளி புத்தாக்க மேம்பாட்டு திட்டம்’ என்பதை பள்ளி கல்வித்துறை தமிழ்நாடு தொழில் முனைவோர் மேம்பாட்டு புத்தாக்க நிறுவனமான யுனிசெப் அறிவுசாரா நிறுவனத்துடன் இணைந்து தொடங்கியுள்ளது. இந்த திட்டமானது மாணவர்களிடையே தலைமைத்துவ பண்புகளை உருவாக்குதல், தொழில் முனைதல், தொழில் முனைவோர் கலாச்சாரத்தை ஊக்குவித்தல், புதிய தொழில் கண்டுபிடிப்புகளை உருவாக்குவதற்கு ஊக்குவித்தல் போன்ற பல்வேறு காரணங்களுக்காக தொடங்கப்பட்டுள்ளது. மேலும் பள்ளி புத்தாகத் திட்டம் விரைவில் நடைமுறைக்கு வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.