தேனி மாவட்டத்தில் உள்ள போடிநாயக்கனூரில் வசித்து வரும் பாலசேகரன் என்பவரது மகன் சஷ்டி குமார் மருத்துவ படிப்புக்காக பிலிப்பைன்ஸ் நாட்டிற்கு சென்றிருந்தார். அங்கு கடந்த 15-ஆம் தேதி அருவி ஒன்றில் குளிக்கச் சென்ற அவர் திடீரென நீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார். இந்த நிலையில் அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ பன்னீர்செல்வம் பிலிப்பைன்ஸ் நாட்டில் உயிரிழந்த சஷ்டி குமாரின் உடலை தமிழகத்திற்கு கொண்டுவர உரிய ஏற்பாடுகளை செய்ய வேண்டும் என்று முதல்வர் மு.க.ஸ்டாலினுக்கு கோரிக்கை விடுத்திருந்தார்.
இதையடுத்து முதல்வர் மு.க.ஸ்டாலின் திராவிட முன்னேற்றக் கழக நாடாளுமன்ற உறுப்பினர் தயாநிதி மாறனும், வெளிநாடு வாழ் தமிழர் நலன் மற்றும் தமிழ்நாடு சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சர் செஞ்சி கே.எஸ்.மஸ்தானும் ஒன்றிய அரசின் வெளியுறவுத்துறையுடன் ஒருங்கிணைந்து ஓ.பன்னீர்செல்வம் கோரிக்கையை நிறைவேற்றுமாறு அறிவுறுத்தினார். அதன்படி இறந்த சஷ்டி குமாரின் உடல் இன்று அதிகாலை விமானத்தின் மூலம் பிலிப்பைன்ஸ் நாட்டில் இருந்து சென்னை விமான நிலையம் கொண்டு வரப்பட்டது. அதன்பிறகு சஷ்டி குமாரின் உறவினர்களிடம் அவருடைய உடல் ஒப்படைக்கப்பட்டது.