தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து பல்வேறு மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது. இந்நிலையில் தென் மாவட்டங்களில் பெய்த கனமழையால் கோவில்களின் குளங்கள் நிரம்பி உள்ளது. இது குறித்து அரசு வெளியிட்ட செய்தியில், முதல்வர் ஸ்டாலின் வழிகாட்டுதலின்படி இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு தலைமையில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அனைத்து கோவிலில் உள்ள திரு குளங்களை சீரமைக்கும் பணி நடைபெற்று வருகின்றன. மேலும் புதிதாகவும் கோவில் குளங்கள் அமைக்கும் பணிகளும் நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தொடர் மழையின் காரணமாக தமிழகத்தில் அனைத்து கோவில்களின் குளங்களும் நிரம்பி உள்ளது. அதில் சென்னையில் உள்ள மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோவில், பார்த்தசாரதி கோவில், வடபழனி முருகன் கோவில் மற்றும் திருச்சி திருவானைக்காவல், ஸ்ரீரங்கம், நந்தி கோவில் தெரு நாகநாதசுவாமி கோவில் மற்றும் திருச்சி மலைக்கோட்டை ஆகிய கோவில்கள் நீரால் சூழ்ந்துள்ளது. மேலும் தென் மாவட்டங்களான மதுரை தெப்பக்குளம் மாரியம்மன் கோவில், திருப்பரங்குன்றம் சரவண பொய்கை குளங்கள், குமரி மாவட்டம் சுசீந்திரம் கோவில் மற்றும் பகவதி அம்மன் கோவில் உள்பட 2,359 கோவில் குளங்கள் நிரம்பியுள்ளன என்று அதில் கூறப்பட்டுள்ளது.