அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் பயிலும் மாணவர்களுக்கு கொரோனா காரணமாக ஏற்பட்டுள்ள கல்வி இடைவெளியை சரி செய்யும் விதமாக “இல்லம் தேடி கல்வி” திட்டம் தமிழக அரசு சார்பில் செயல்படுத்தப்பட்டு வருகிறது. அதன்படி விருதுநகர் மாவட்டத்தில் உள்ள ராஜபாளையத்தில் செயல்பட்டு வரும் 278 மையங்களில் “இல்லம் தேடி கல்வி” திட்டம் மூலம் சுமார் ஆயிரக்கணக்கான மக்கள் பயனடைந்து வருகின்றனர். மேலும் புத்தகத்தின் மூலம் புரிய வைக்க முடியாத பாடங்களை கூட மாணவர்களுக்கு கண்காட்சி மூலம் புரியவைக்க 12 குறுவள மையங்களில் கடந்த வாரம் கற்றல் கற்பித்தல் தொடர்பான கண்காட்சியும் நடைபெற்றது.
இந்நிலையில் கல்வித்துறை அதிகாரிகள் இந்த கண்காட்சி மூலம் பள்ளி மாணவ, மாணவிகள் சில பாடங்களை புரிந்து கொண்டதாக தெரிவித்துள்ளனர். மேலும் இந்த கண்காட்சியில் உபகரணங்களை தெளிவான முறையில் காட்சிப்படுத்தியதோடு, சிறப்பான பங்களிப்பை வழங்கியதற்காக தன்னார்வலர்கள், இல்லம் தேடி கல்வி திட்ட ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா நடத்தப்பட்டது. இந்த நிகழ்ச்சி தெற்கு காவல் நிலையம் பின்புறத்தில் உள்ள வட்டார வள மையம் கூட்டரங்கில் நடைபெற்றது. இல்லம் தேடி கல்வி திட்டத்தில் பணியாற்றும் ஆசிரியர்கள் மற்றும் தன்னார்வலர்கள் ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வித்துறை சார்பில் நடத்தப்பட்ட இந்த நிகழ்ச்சியில் ஐந்து குழுக்களாகப் பிரிக்கப்பட்டு பாராட்டுச் சான்றிதழ்களை பெற்றுக்கொண்டனர்.