திருப்பூர் மாவட்டத்தில் உள்ள பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவை தினமும் 100 சதவீத அளவில் உறுதி செய்வதற்கு தலைமை ஆசிரியர்களுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் பள்ளி மாணவர்களின் விவரங்கள் அனைத்தும் எமிஸ் இணையதளத்தில் பதிவேற்றம் செய்து சேகரிக்கப்பட்டு வருகிறது. ஒவ்வொரு மாணவர்களின் பெயர், முகவரி, பிறந்த தேதி, ஜாதி, மதம் போன்ற அனைத்து விவரங்களும்அதில் இருக்கும். அதனை தொடர்ந்து தினமும் மாணவர்கள் வருகை பதிவு என்ற ஆப்பில் பதிவேற்றம் செய்யப்படும். அதேபோல அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் ஆசிரியர்கள் வருகை மற்றும் மாணவர்கள் வருகையை எமிஸ் செயலில் பதிவேற்றம் செய்யப்பட்டிருக்கும்.
இந்நிலையில் திருப்பூர் மாவட்டத்தில் மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் வருகை பதிவை தினமும் 100 சதவீத அளவில் உறுதி செய்யும் அளவிற்கு முயற்சி மேற்கொள்ள வேண்டும் என்று பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு கல்வித்துறை அதிகாரிகள் அறிவித்துள்ளனர். எமிஸ் பதிவுகளை எளிதாக செய்யும் வகையில் சர்வர் இணைப்பு சரி செய்யப்படும். ஆன்லைன் வாயிலாகவும் பதிவு செய்யவும் நடவடிக்கை மேற்கொள்ளப்படும். முதல்நாள் பதிவுகள் மறுநாள் ஆய்வுக்கு எடுத்து கொள்ளப்படுகிறது. வகுப்புகள் துவங்கும் போதே அனைத்து பதிவுகளையும் ஆசிரியர்கள் முடித்து விட வேண்டும். இதனால் பதிவேற்றம் செய்யும் போது பதிவு செய்யும் நேரமும் பதிவாகும். இணையதளத்தில் 100 சதவீத அளவில் ஆசிரியர்கள் மற்றும் மாணவர் வருகை பதிவு உறுதி செய்துகொள்ள வேண்டும் என்று பள்ளிகள் தோறும் தெரிவிக்கப்பட்டு வருகின்றது.