தமிழத்தில் கடந்த ஒன்றரை வருடமாக கொரோனா காரணமாக பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்தது. இதனையடுத்து பொதுத்தேர்வை கருத்தில் கொண்டு பத்து, பன்னிரெண்டாம் வகுப்புகளுக்கு மட்டும் பள்ளி திறக்கப்பட்டது. அப்போது இரண்டாவது அலை வேகமெடுத்ததால் மீண்டும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு பள்ளி ஆசிரியர்களுக்கு வருடந்தோறும் நடைபெறும் பொது மாறுதல் கலந்தாய்வு நடைபெற வில்லை.
பின்னர் தற்போது கொரோனா சற்று குறைந்துள்ளதால், பள்ளிகள் அனைத்தும் திறக்கப்பட்டு நேரடி வகுப்பு நடந்து வருகிறது. இந்த நிலையில் பொதுமாறுதல் கலந்தாய்வு நடத்த ஆசிரியர்கள் கோரிக்கை விடுத்து வருகின்றனர் .இதுகுறித்து பள்ளிக்கல்வித்துறை செயலாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், அதிக ஆசிரியர்கள் கொண்ட பள்ளிகளில் பணியாற்றும் ஆசிரியர்களை வேறு பள்ளிகளுக்கு பணியிட மாறுதல் செய்ய வேண்டும். புதிதாகப் பணியில் சேர்ந்த ஆசிரியர்கள் கட்டாயம் எட்டு வருடம் ஒரே பள்ளியில் பணிபுரிய வேண்டும். அதன் பின்னர் அவர்கள் பணியிட மாறுதலில் கலந்து கொள்ளலாம்.
பொது மாறுதல் கலந்தாய்வில் 100 % பார்வைத்திறன் குறைபாடு உடைய ஆசிரியர்கள், 40 % பாதிக்கப்பட்ட மாற்றுத்திறனாளிகள், விதவைகள், 40 வயதிற்கு மேற்பட்ட பெண்கள், மனவளர்ச்சி குன்றிய அல்லது உடல் ஊனமுற்ற குழந்தைகளின் பெற்றோர்கள், சிறுநீரக மாற்று அறுவை சிகிச்சை செய்து கொண்ட ஆசிரியர்கள், டயாலிசிஸ் சிகிச்சை, இதய அறுவை சிகிச்சை, புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்கள், மூளை புற்றுநோய் பாதிக்கப்பட்டவர்கள் போன்றவர்களுக்கு சிகிச்சை பெறுவதற்கு முன்னுரிமை அளிக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.