தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்து வருவதால் பிப்ரவரி 1ஆம் தேதி முதல் பள்ளி, கல்லூரிகள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகிறது. மேலும் தமிழக அரசு பள்ளிகளில் உள்ள ஆசிரியர் காலிப் பணியிடங்களை நிரப்புவதற்கான நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது. அதோடு மட்டுமில்லாமல் ஆசிரியர் தகுதிதேர்வில் தேர்ச்சி பெற்றால் வழங்கப்படும் சான்றிதழ் தற்போது வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதற்கு முன்பு 7 வருடங்கள் மட்டுமே அந்த சான்றிதழ் செல்லுபடியாகும். கடந்த மாதம் கணினி பயிற்றுனர், முதுகலை ஆசிரியர் உள்ளிட்ட பணியிடங்களுக்கான தேர்வு நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து ஆசிரியர் தேர்வு வாரியம், ஆசிரியர் தகுதித் தேர்வு மூலமாக அரசு பள்ளிகளில் உள்ள 9 ஆயிரத்து 494 காலிப்பணியிடங்களை நிரப்ப உள்ளதாக அறிவிப்பு வெளியிட்டது. இருப்பினும் கடந்த 2013 ஆம் ஆண்டிலிருந்து ஆசிரியர் தகுதி தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு இன்னும் பணி நியமனம் வழங்கப்படாமல் உள்ளது.
எனவே விரைவில் பணி நியமனம் வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் வலியுறுத்தி வருகின்றனர். இந்நிலையில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “கடந்த 2013ஆம் ஆண்டு ஆசிரியர் தகுதித்தேர்வில் தேர்ச்சி பெற்ற 80 ஆயிரம் பேருக்கு பணிநியமனம் வழங்கப்படாமல் உள்ளது. இதனால் புதிய ஆசிரியர்கள் நியமனம் செய்வதில் பல குழப்பங்கள் நீடித்து வருகிறது. இதனை தெளிவுப்படுத்த முதலமைச்சருடன் விரைவில் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்கப்படும்” என்று அவர் தெரிவித்துள்ளார்.