தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த ஆண்டு மார்ச் மாதம் ஊரடங்கு அமல்படுத்தப்பட்டது. அப்போது பலத்த கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டன. அதனால் மக்கள் அனைவரும் வீட்டை விட்டு வெளியேற முடியாமல் வீட்டிலேயே முடங்கி கிடந்தனர். அதன்பிறகு கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில், ஊரடங்கு தளர்வுகளை தமிழக அரசு படிப்படியாக அறிவித்து வருகிறது. அதனால் மக்கள் அனைவரும் தங்கள் இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பி வருகிறார்கள்.
ஆனால் கடந்த 2 வாரமாக தமிழகத்தில் கொரோனா பாதிப்பு புதிய உச்சத்தை தொட்டுள்ளது. அதன் காரணமாக தடுப்பூசி போடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. அதுமட்டுமன்றி ஏப்ரல் 10 முதல் புதிய கட்டுப்பாடுகளை விதித்து தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. மேலும் மாநிலம் முழுவதும் கண்காணிப்பு பணியும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. இருந்தாலும் நாளுக்கு நாள் கொரோனா பாதிப்பு உயிரிழப்பு எண்ணிக்கையும் அதிகரித்துக் கொண்டே வருகிறது.அதனால் இரவு நேர ஊரடங்கு உள்ளிட்ட பல்வேறு கொரோனா கட்டுப் பாடுகளுடன் கூடிய ஊரடங்கு இன்று முதல் தமிழகம் முழுவதும் அமலுக்கு வந்துள்ளது.
இந்நிலையில் மாநகர மற்றும் விரைவு போக்குவரத்து ஊழியர்கள் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என்று அரசு உத்தரவிட்டுள்ளது. அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட வேண்டும் என்று அனைத்து ஊழியர்களுக்கும் அரசு போக்குவரத்து கழக மேலாண் இயக்குனர் இளங்கோவன் அதிரடியாக உத்தரவிட்டுள்ளார். தடுப்பூசி போட்டும் கொரோனா பாதிப்பு ஏற்பட்டால் நலம் அடையும் வரை சம்பளம் பிடித்தம் இன்றி 7 நாட்கள் விடுமுறை அளிக்கப்படும் என்று அறிவித்துள்ளார்.