இந்தியாவில் தொழில்நுட்ப வளர்ச்சியால் தற்போது நாம் அனைத்து வேலைகளையும் இருந்த இடத்தில் இருந்தே செய்து வருகிறோம். அதாவது வங்கி சார்ந்த பணிகள், அலுவலக பணிகள் என அனைத்து பணிகளும் ஆன்லைன் மூலம் நடைபெற்று வருகிறது. இந்நிலையில் தமிழகத்தில் இ-சேவை 2.0 திட்டம் தொடங்கப்பட இருக்கிறது. இதையடுத்து தகவல் தொழில்நுட்பவியல் துறையின் சார்பாக தமிழக அரசுத்துறை அலுவலர்களுக்கு இணையப் பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சி வழங்கப்பட்டது. இணையவழி பாதுகாப்பு நடைமுறைகளை கடைபிடிப்பதற்காக தமிழக தொழில்துறை எல்காட் நிறுவனம், TNeGA மற்றும் சி-டாக் நிறுவனம் இணைந்து இந்த பயிற்சியை வழங்கி வருகின்றனர்.
இவ்வாறு இணைய பாதுகாப்பு விழிப்புணர்வு பயிற்சியானது முதன்மை தகவல் பாதுகாப்பு அலுவலர்களுக்கும், அனைத்து அரசுத்துறை அலுவலர்களுக்கும் நடத்தப்படுகிறது. சுமார் 30,000-க்கும் மேற்பட்ட அரசு அலுவலர்களுக்கு இப்பயிற்சி வழங்கப்பட்டு வருகிறது. இந்த பயிற்சியை தகவல் தொழில்நுட்ப துறை அமைச்சர் துவங்கி வைத்தார். அப்போது அமைச்சர் பேசியதாவது, கடந்த 10 ஆண்டுகளாக இ-சேவை மையங்களில் மக்களுக்குத் தேவையான சேவைகள் வழங்கப்படவில்லை.
இந்நிலையில் திமுக அரசு ஆட்சிக்கு வந்த பிறகு புதிய சேவைகள் மற்றும் மக்களுக்கு தேவையானவைகள் இணைக்கப்பட்டுள்ளன. அந்த அடிப்படையில் தற்போது இ-சேவையில் விரைவில் 2.0 அறிமுகப்படுத்தப்பட இருக்கிறது. இதன் வாயிலாக விரைவாகவும், எளிமையாகவும் சேவைகளை பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன. அத்துடன் தனியார் இ- சேவை மையங்களில் அதிக கட்டணம் வசூலிப்பதை தடுப்பதற்காக இ பேமண்ட் வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது என்று தெரிவித்தார்.