தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாகவே கொரோனா பரவல் அதிகரித்து வந்தது. இதனால் அரசு பல்வேறு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டன. அந்த வகையில் முகக்கவசம் அணிதல், தனிமனித இடைவெளி, ஊரடங்கு முதலான பல்வேறு கட்டுப்பாடுகளை விதித்திருந்தது. இந்த கட்டுப்பாடுகளை மீறி செயல்படுபவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டது. இதற்கிடையில் பள்ளி, கல்லூரி மற்றும் அலுவலகங்கள் எதுவுமே செயல்படவில்லை. எனினும் பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக பாடம் கற்பிக்கப்பட்டது. இதையடுத்து அலுவலக பணியாளர்கள் வீட்டில் இருந்தே வேலை செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டது.
அதன்பின் கொரோனா பரவல் நாளுக்கு நாள் பெருகி கொண்டிருக்கும் வேளையில் முன்களபணியாளர்கள் தொடர்ந்து தனது பணியை செய்து கொண்டிருந்தனர். அந்த அடிப்படையில் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்கள் விடுமுறை இன்றி பணிபுரிந்து கொண்டிருந்தனர். இவர்கள் மட்டுமின்றி அரசு ஊழியர்களுமே எந்த விடுமுறையும் எடுக்காமல் பணிபுரிந்து வந்தனர். இதன் காரணமாக மற்ற மக்களை காட்டிலும் மருத்துவர்கள், செவிலியர்கள் மற்றும் அரசு ஊழியர்கள் தான் கொரோனா தொற்றினால் பெரிதும் பாதிக்கப்பட்டனர்.
இதனால் அரசு ஊழியர்கள் மற்றும் முன் களப்பணியாளர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டால் அவர்களுக்கு விடுப்பு வழங்க வேண்டும் என்று வேண்டுகோள் விடுத்துள்ளனர். இந்த கோரிக்கையை ஏற்ற அரசு ஊழியர்கள் கொரோனா தொற்றினால் பாதிக்கப்பட்டு இருந்தால், மருத்துவரின் ஆலோசனையின் படி அவர் சிகிச்சை பெற்ற நாட்கள் மற்றும் தனிமைப்படுத்தப்பட்ட நாட்கள் அனைத்தும் சிறப்பு தற்செயல் விடுப்பாக வழங்கலாம் என்று மனிதவள மேலாண்மைத் துறை கூடுதல் செயலாளர் (பொறுப்பு) அகிலா தெரிவித்துள்ளார்.