தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் வழங்குவது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
தமிழகத்தில் அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டம் வழங்கப்பட்டு வருகின்றது. அவர்களின் பணிக்காலம் முடிந்தவுடன் அவர்களுக்கு பிஎஃப் தொகை மற்றும் மாதந்தோறும் ஓய்வூதிய தொகை வழங்கப்பட்டு வந்தது. இந்நிலையில் கடந்த 2003ஆம் ஆண்டு புதிய ஓய்வூதிய திட்டம் கொண்டு வரப்பட்டு இனி ஓய்வு ஊதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. மேலும் பணிக்காலத்தில் பிடித்தம் செய்யப்பட்ட தொகையை மட்டுமே வழங்கப்படும், குடும்ப ஓய்வூதியம் கிடையாது என்று அறிவிக்கப்பட்டது. இதனால் அரசு ஊழியர்கள் மிகுந்த அதிர்ச்சி அடைந்தனர். மேலும் பழைய ஓய்வூதிய திட்டத்தை மீண்டும் அமல்படுத்த வேண்டும் என்று கோரிக்கை வைக்கப்பட்டது.
கடந்த சட்டமன்ற தேர்தலில் முக ஸ்டாலின் அவர்கள் வெற்றி பெற்ற பிறகும் தமிழக அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்துவோம் என்று தெரிவித்திருந்தார். ஆனால் இதுவரை அந்த வாக்குறுதி நிறைவேற்றப்படவில்லை. அரசு ஊழியர்கள் அனைவரும் பழைய ஓய்வூதிய திட்டத்தை செயல்படுத்த வேண்டும் என்று தொடர்ந்து போராடி வருகின்றனர். இந்நிலையில் வரும் மார்ச் 18ஆம் தேதி தமிழக சட்டப்பேரவையில் நிதி அமைச்சர் தலைமையில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட உள்ளது. அதில் பழைய ஓய்வூதியத் திட்டம் தொடர்பாக அறிவிப்புகள் வெளியாகலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
இந்த நிலையில் தற்போது பள்ளி கல்வித்துறை இதுகுறித்து விளக்கம் ஒன்றை அறிவித்துள்ளது. அதில் தமிழக அரசு ஊழியர்களுக்கு 2004ஆம் ஆண்டு கொண்டு வரப்பட்ட பங்களிப்பு ஓய்வூதியத் திட்டம் நடைமுறையில் உள்ள நிலையில், பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த சாத்தியக்கூறுகள் உள்ளதா என்பது தமிழக அரசின் கொள்கை முடிவாகும். தமிழக அரசு விரைவில் இது தொடர்பான அறிவிப்பை வெளியிடும் என்று தெரிவித்தனர். மேலும் இது தவிர வேறு எதுவும் எங்களுக்கு தெரியாது என்று பள்ளிக் கல்வித்துறை அதிகாரிகள் ஆசிரியர்களுக்கு விளக்கம் அளித்துள்ளனர்.