சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளையில் முத்துராமலிங்கம் என்பவர் மனு ஒன்றை தாக்கல் செய்துள்ளார். இவர் டிஆர்ஓவாக மதுரை மாவட்டத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் தாக்கல் செய்துள்ள மனுவில், “எனக்கு ஐஏஎஸ் பதவி உயர்வுக்கான தகுதி உள்ளது. மத்திய அரசின் ஆய்வு குழு தான் பதவி உயர்வை டிஆர்ஓக்களுக்கு வழங்குவது குறித்து முடிவெடுக்கும். ஐஏஎஸ் பதவி உயர்வை எனக்கு வழங்கவும் இந்த குழுவின் கூட்டத்தினை கூட்டவும் உத்தரவிட வேண்டும்” என்று மனுவில் குறிப்பிட்டிருந்தார்.
இந்த மனுவை விசாரித்த நீதிபதி எஸ்.எம்.சுப்பிரமணியம், “அரசு பொது ஊழியர்கள் பதவி உயர்வை உரிமையாக கோர முடியாது. அடிப்படை உரிமைகளில் ஒன்று தான் பதவி உயர்வு. இருப்பினும் நிர்வாகம் தான் பதவி உயர்வு பெறுவதற்கு தகுதியான நபர்களை தேர்வு செய்யும். பதவி உயர்வு பெறுவதற்கான தகுதி இருப்பினும் எனக்கு பதவி உயர்வு வழங்க வேண்டும் என்று கேட்க முடியாது. மத்திய அரசின் ஆய்வுக்குழு கூட்டம் நடந்திருந்தால் தனக்கான பதவி உயர்வு கிடைத்திருக்கும் என்று கூறுவது கற்பனையானது.
நீதிமன்றம் எதிர்கால நிகழ்வுகள் குறித்து முடிவெடுக்க முடியாது. மத்திய அரசு தான் டிஆர்ஓகளுக்கான பதவி உயர்வு குறித்து முடிவு செய்யும். இதற்காக மத்திய அரசின் ஆய்வுக் குழு கூட்டத்தை கூட்ட வேண்டும் என்பதனை உரிமையாக கேட்க முடியாது. பதவி உயர்வு, பணியிடங்களை நிரப்புவது போன்றவை நிர்வாக ரீதியான முடிவுகளாகும். எனவே பதவி உயர்வு வழங்க வேண்டும் என்றும், குறிப்பிட்ட பணியிடங்களை நிரப்புமாறும் உத்தரவிட கோர முடியாது என்பதால் மனுதாரர் கேட்கும் நிவாரணத்தை வழங்க இயலாது” என்று நீதிபதி உத்தரவு பிறப்பித்துள்ளார். மேலும் அந்த மனுவையும் தள்ளுபடி செய்துள்ளார்.