Categories
மாநில செய்திகள்

தமிழக அரசு ஊழியர்களுக்கு சம்பளம் பிடித்தம்…. தேமுதிக தலைவர் வெளியிட்ட அறிக்கை….!!!!

தேமுதிக தலைவர் விஜயகாந்த் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், “சமையல் எரிவாயு, டீசல், பெட்ரோல் விலை உயர்வு, பணிநிரந்தரம், பொதுத் துறை நிறுவனங்களை தனியார் மயமாக்குவதற்கு எதிர்ப்பு ஆகிய பல காரணங்களுக்காக இன்றும், நாளையும் நாடு முழுவதும் தொழிற்சங்கங்கள் போராட்டத்தில் ஈடுபட உள்ளன. அதில் காப்பீடு துறை, வங்கி, மின் துறை, போக்குவரத்து துறை பணியாளர்கள் என 20 கோடி பேர் போராட்டத்தில் பங்கேற்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. ஆனால் இந்த வேலை நிறுத்த போராட்டத்திற்கு தமிழக அரசு எதிர்ப்பு எதுவும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும் போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுக்கு சம்பளம் 2 நாட்கள் பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவிப்பானது தமிழக அரசினுடைய இரட்டை நிலைப்பாட்டை வெளிப்படுத்துகிறது. தங்களுடைய உரிமைகளுக்காக போராட்டத்தில் ஈடுபடும் அரசு ஊழியர்களுடைய சம்பளத்தை பிடித்தம் செய்வது நியாயமல்ல. இதன் மூலம் தமிழக அரசு மறைமுகமாக மத்திய அரசுக்கு எதிர்ப்பும் நேரடியாக ஆதரவும் அளிக்கிறது என்பது வெட்டவெளிச்சமாக தெரிகிறது.

தமிழக அரசு ஊழியர்களின் போராட்டம் தொடர்பில் தெளிவான முடிவை எடுப்பதோடு, போராட்டத்திற்கு அனுமதி வழங்குகிறதா ? இல்லையா ? என்பதனை தெளிவுபடுத்த வேண்டும். தங்களுடைய உரிமைகளுக்காக 28, 29 ஆகிய தேதிகளில் போராட்டத்தில் ஈடுபட உள்ள ஊழியர்களின் சம்பளத்தை பிடித்தம் செய்ய கூடாது. பிள்ளையையும் கிள்ளிவிட்டு தொட்டிலையும் ஆட்டுவது போல் தமிழக அரசின் செயல் உள்ளது” என்று தெரிவித்துள்ளார்.

Categories

Tech |