நாடு முழுவதும் 2020 ஆம் ஆண்டு கொரோனா பரவல் காரணமாக பொதுமுடக்கம் அமலில் இருந்தது. இதனால் பல நிறுவன ஊழியர்கள் வீட்டில் இருந்து வேலை பார்க்கும் நிலை ஏற்பட்டது. ஆனால் அந்த அரசு ஊழியர்கள் மட்டும் இடைவிடாத சேவைகளை வழங்க அயராமல் உழைத்தனர். இதனால் ஏராளமான அரசு ஊழியர்களுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு சிகிச்சை பலனின்றி அதிகமான ஊழியர்கள் உயிரிழந்தனர். அதனால் அவர்கள் நலன் கருதி தமிழக அரசு பல திட்டங்களை அமல் படுத்தியது. அதன்படி புதிய மருத்துவ காப்பீடு 2021 திட்டத்தின்படி, மாநில அரசு நிறுவனங்களில் பணிபுரியும் பணியாளர்கள் மற்றும் அவர்களது குடும்ப உறுப்பினர்கள் மருத்துவ சிகிச்சைக்காக ரூ.5 லட்ச மருத்துவ உதவி பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது.
மேலும் எதிர்பாராத செலவு நிதி மூலதனம் மூலம் ரூ.20 லட்சம் வரை மருத்துவ உதவி பெறலாம் என்று தமிழக அரசு அறிவித்தது. இந்த புதிய மருத்துவ காப்பீட்டு திட்டம் 2021 பொதுத்துறை நிறுவனமான யுனைடெட் இந்தியா இன்சூரன்ஸ் கம்பெனி மூலம் செயல்படுத்தப்படுகிறது. அதுமட்டுமில்லாமல் இத்திட்டத்தில் காப்பீடு கட்டணமாக அரசு ஊழியர்களுக்கும் ரூ.300 பெறப்படுகிறது. மேலும் புற்றுநோய் அறுவை சிகிச்சை, கீமோதெரபி, கதிரியக்க சிகிச்சை மற்றும் புற்றுநோய் கட்டிகளில் நோய் தடுப்பாற்றல் சிகிச்சை, கல்லீரல், சிறுநீரகம், இதயம், நுரையீரல் மற்றும் எலும்பு மஜ்ஜை மாற்று அறுவை சிகிச்சை, சிக்கலான இதய அறுவை சிகிச்சை மற்றும் இருதய மாற்று அறுவை சிகிச்சை, விபத்து இதய வால்வு மாற்று அறுவை சிகிச்சை ஆகியவற்றிற்கான மருத்துவ சிகிச்சை பெற நிதி உச்சவரம்பு ரூ.10 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது.