தமிழகத்தில் அரசு ஊழியர்கள் நீண்ட நாட்களாகவே அகவிலைப்படி உயர்வு வேண்டி கோரிக்கை விடுத்தது வந்தனர். இந்த சமயத்தில் கடந்த 2021 ஏப்ரல் மாதம் நடந்த சட்டமன்ற தேர்தலின் போது தற்போதைய முதல்வர் முக.ஸ்டாலின் அவர்கள் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று வாக்குறுதி அளித்தார். அதன்படி முதல்வர் ஸ்டாலின் ஆட்சிக்கு வந்ததை அடுத்து சட்டமன்ற மானிய கோரிக்கை விவாதத்தின் போது 2022 ஜனவரி மாதம் முதல் அகவிலைப்படி உயர்வு வழங்கப்படும் என்று அறிவித்தார். அந்த வகையில் புத்தாண்டு தொடங்கியதும் மத்திய அரசு ஊழியர்களுக்கு இணையாக 31 சதவீதம் அகவிலைப்படி உயர்த்தப்பட்டது.
கடந்த வாரம் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 17 சதவீதத்தில் இருந்து 31 சதவீதமாக உயர்த்தபட்டதற்கான அரசாணை வெளியிடப்பட்டது. இதன் காரணமாக அரசுக்கு வருடத்துக்கு தோராயமாக 8724 கோடி ரூபாய் செலவினம் ஏற்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதனை தொடர்ந்து அரசு ஊழியர்களுக்கான வீட்டு வாடகைப்படி உயர்த்தப்பட்டுள்ளது. இதில் நகராட்சிகளில் வசிப்போருக்கு வாடகைப்படி 16 சதவீதத்தில் இருந்து 18 சதவீதமாகவும், ஊரகப் பகுதிகளில் வசிப்போருக்கு 8 சதவீதத்தில் இருந்து 9 சதவீதமாகவும் வாடகைப்படி உயர்வு அளிக்கப்பட்டுள்ளது.
இத்தொகை ஜனவரி 1 ஆம் தேதி முதல் கணக்கிட்டு வழங்க வேண்டும் என்றும் தெரிவித்துள்ளார். இந்நிலையில் பிப்ரவரி 1ஆம் தேதியான இன்று அரசு ஊழியர்களுக்கு ஊதியம் மற்றும் ஓய்வூதியத்தொகை வருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் தலைமை ரிசர்வ் வங்கியின் சர்வரில் கோளாறு ஏற்பட்டுள்ளது. இதனால் அரசு ஊழியர்களும், ஆசிரியர்களும் சம்பளத்தை பெற்று கொள்வதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஆகவே தொழில்நுட்ப கோளாறு உடனே சரி செய்யப்பட்டு இன்று மாலைக்குள் ஊதியம் வங்கி கணக்கில் வரவு வைக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது..