தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டு முதல் பல்வேறு வகையான திட்டங்களை பள்ளிக்கல்வித்துறை அறிமுகப்படுத்திக் கொண்டிருக்கிறது. அந்த வகையில் பள்ளிகள், ஆசிரியர்கள், மாணவர்கள் குறித்த புள்ளி விவரங்களில் ஏதேனும் முறைகேடு ஏற்படுவதை தடுப்பதற்காக எமிஸ் தளத்தில் அனைத்து வகையான புள்ளி விவரங்களும் சேகரிக்கப்பட்டு வருகின்றது. அதன்படி ஒவ்வொரு மாணவனுக்கும் ஒரு எமிஸ் எண் வழங்கப்படுகிறது இந்த எண்ணில் அனைத்து தரவுகளுமே சேமிக்கப்படுகிறது. மேலும் எமிஸ் எண் ஒரு மாணவன் எத்தனை பள்ளிகளுக்கு மாறினாலும் அதே எண் தான் என அடையாள எண்ணாக கருதப்படுகின்றது. இந்த எமிஸ் என்னை பயன்படுத்தி மத்திய மற்றும் மாநில அரசுகளின் நலத்திட்டங்களும் செயல்படுத்தப்படுகின்றது. இதனை அடுத்து தற்போது எமிஸ் தளத்தில் மேலும் கூடுதலான தகவல்களை சேகரிக்க வேண்டும் என உத்தரவு பிறப்பிக்கப்பட்டிருக்கிறது.
இந்த உத்தரவில் மருத்துவ ஆராய்ச்சி மற்றும் தகவல் பதிவு பணி வழங்கப்பட்டிருக்கிறது. அதாவது தமிழகத்தில் அனைத்து அரசு பள்ளிகளில் பயின்று வரும் மாணவர்களுக்கு 36 வகையான நோய்கள் பற்றிய ஆய்வு மேற்கொண்டு எமிஸ் தளத்தில் அனைத்து தகவல்களையும் பதிவேற்றம் செய்ய வேண்டும் என ஆசிரியர்களுக்கு பள்ளி கல்வித்துறை உத்தரவிட்டிருக்கிறது. அதன்படி ஒவ்வொரு மாணவர்களுக்கும் தைராய்டு, கண் பார்வை குறைபாடு, இரத்த சோகை, தோல் நோய், காச நோய், வைட்டமின் குறைபாடு நோய், எதிர்ப்பு சக்தி குறைவு, தொழு நோய், பல் நோய், சிறுநீர் பாதையில் உள்ள பாதிப்பு, மாணவனின் தலை பெரிதா, சிறியதா? இரண்டு கண்களும் ஒரே அளவில் இருக்கின்றதா? போன்ற 36 வகையான தகவல்களை சேகரித்து எமிஸ் தலத்தில் பதிவேற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. இதற்கு முன்னதாக மாணவர்கள் ஒரு வாரம் சாப்பிட்ட உணவு வகைகள் பற்றியும் பதிவேற்ற வேண்டும் என உத்தரவிடப்பட்டிருந்தது. இந்த நிலையில் நடப்பு கல்வி ஆண்டில் இது போன்ற கூடுதல் பணிகளை வழங்குவது ஆசிரியர்களுக்கு மிகுந்த பணிச்சுமையாக இருப்பதாக ஆசிரியர்கள் வருத்தம் தெரிவித்து வருகின்றார்கள்.