தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக மாதிரி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தமிழகத்தில் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக கடந்த மார்ச் மாதம் முதல் பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டுள்ளன. அதனால் மாணவர்கள் அனைவருக்கும் ஆன்லைன் மூலமாக வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன.கல்லூரி இறுதியாண்டு மாணவர்களுக்கு மட்டும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வருகின்றன. ஆனால் பள்ளிகள் எப்போது திறக்கப்படும் என்ற அறிவிப்பு எதுவும் தற்போது வரை வெளியாகவில்லை. அதனால் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக தேர்வுகள் நடத்த பரிசீலனை செய்யப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அரசு பள்ளியில் பயிலும் 10 முதல் 12 ஆம் வகுப்பு படிக்கும் மாணவர்களுக்கு வாட்ஸ்அப் மூலமாக மாதிரி தேர்வுகளை நடத்த முடிவு செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அரசுப் பள்ளி மாணவர்களுக்கு அரையாண்டு தேர்வாக இல்லாமல், மாதிரி தேர்வாக நடத்தப்படும். பொதுத் தேர்வுக்கு மாணவர்களை தயார்படுத்தும் வகையில் மட்டுமல்லாமல் மாணவர்களின் கற்றல் ஆர்வத்தை அதிகரிக்கும் வகையிலும் இந்த தேர்வை நடத்த தமிழக அரசு முடிவு செய்திருப்பதாக கூறப்படுகிறது.