அரசு பள்ளிகளில் ஸ்மார்ட் கிளாஸ் வகுப்புகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.
தமிழகத்தில் தி.மு.க அரசு ஆட்சிக்கு வந்தவுடன் பல்வேறு நலத்திட்டங்களை செய்து வருகிறது. அந்த வகையில் பள்ளிகளின் மீது அதிக கவனம் செலுத்தி பல்வேறு சிறப்பம்சங்களை செய்து வருகிறது. கொரோனா பரவலின் போது பள்ளிகள் திறக்கப்படாமல் இருந்ததால் இல்லம் தேடி கல்வி என்ற திட்டம் அறிமுகப்படுத்தப்பட்டது. இதன்மூலமாக அரசு பள்ளிகளில் மாணவர் சேர்க்கை அதிகமாகியுள்ளது. இந்நிலையில் கொரோனா காலத்தில் தனியார் பள்ளிகளில் கட்டணம் செலுத்த முடியாத பல மாணவர்கள் அரசுப்பள்ளிகளில் சேர்ந்தனர். எனவே பள்ளிகளின் தரத்தை உயர்த்த பள்ளிக்கல்வித்துறை முடிவு செய்துள்ளது. அந்த வகையில் தனியார் பள்ளிகளுக்கு நிகராக அரசு பள்ளிகளிலும் பாடத்திட்டத்தின் தரம் உயர்த்தப்பட்டுள்ளது.
சென்னை மாவட்டத்தில் உள்ள சைதாப்பேட்டையில் சுமார் 20 லட்சம் மதிப்பீட்டில் வருமுன் காப்போம் திட்டம் மற்றும் அரசு பள்ளி மாணவர்களுக்கு ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது. இதை சுகாதாரத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கி வைத்துள்ளார். இந்த விழாவில் சென்னை மாநகராட்சி மேயர் பிரியா ராஜன் மற்றும் மாநகராட்சி ஆணையர் சுகன் தீப் சிங் பேடி கலந்துகொண்டனர். இதனையடுத்து சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்தார். அதில் தனியார் தொண்டு நிறுவனத்தின் உதவியுடன் 12.49 லட்சம் மதிப்பில் 3 ஸ்மார்ட் கிளாஸ் வகுப்பறைகள் தொடங்கப்பட்டுள்ளது. மேலும் தனியார் பள்ளிகளை ஒப்பிடும்போது அரசு பள்ளிகளில் கற்பிக்கும் திறன் அதிகமாக உள்ளது என்று கூறினார்.