வெளிநாடுகளில் பரவிவரும் ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தமிழகத்தில் பரவாமல் தடுக்க மாவட்ட ஆட்சியர்களுடன் தலைமைச் செயலாளர் இறையன்பு காணொலிக் காட்சி மூலமாக நேற்று ஆலோசனை நடத்தினார். இதுதொடர்பாக அரசு வெளியிட்டுள்ள செய்தியில், உலகையே அச்சுறுத்திக் கொண்டிருக்கும் கொரோனா வைரஸ் தனது மரபணுவில் தொடர்ச்சியாக மாற்றங்களை உருவாக்குவதன் மூலமாக புதிய வகை உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றுகிறது. அதன்படி தற்போது ஒமைக்ரான் உருமாறிய கொரோனா வைரஸ் தோன்றியுள்ளது.
இந்த வைரஸ் தென் ஆப்பிரிக்கா உள்ளிட்ட ஐரோப்பிய நாடுகளில் மிக வேகமாக பரவி வருகிறது. இந்த வைரஸ் உடலின் நோய் எதிர்ப்பு சக்தியை மீறி தப்பிக்க கூடிய தன்மை அதிகரித்தல், வேகமாக பரவுதல் மற்றும் வேகமாக செல்களுக்குள் ஊடுருவும் தன்மை போன்ற தன்மைகள் கொண்டதாக உள்ளது என ஆய்வில் தெரியவந்துள்ளது. இத்தகைய கொடிய வைரஸ் தமிழகத்தில் பரவுவதை தடுக்க கண்காணிப்பு பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. விமான நிலையங்களில் வெளிநாட்டு பயணிகள் மற்றும் வித்தியாசமான கொரோனா அறிகுறிகள் உள்ளவர்களிடத்தில் மரபணு வரிசைப்படுத்துதல் பரிசோதனை செய்யப்பட்டு வருகிறது.
இதுவரை இந்த புதிய வைரஸ் தமிழகத்தில் கண்டறியப்படவில்லை. வெளிநாட்டிலிருந்து வரும் பயணிகளிடம் இருந்து தமிழகத்தில் பரவாமல் இருக்க தேவையான தடுப்பு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. தமிழகத்தில் இந்த புதிய வகை வைரஸ் வராமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளையும் எடுக்குமாறு அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு தலைமைச் செயலாளர் இறையன்பு உத்தரவிட்டுள்ளார். கொரோனா தடுப்பூசி மட்டுமே நம்மை காக்கும் ஆயுதம் என்பதால், அனைத்து மாவட்ட ஆட்சியர்களுக்கு பொதுமக்களிடையே தொடர்ந்து விழிப்புணர்வு ஏற்படுத்த இரண்டு தவணை தடுப்பூசிகளை செலுத்தி கொள்ள அறிவுறுத்த வேண்டும்.
மேலும் முகக்கவசம் அணிதல், பொது இடங்களில் சமூக இடைவெளியை கடைபிடித்தல் மற்றும் கைகளை அடிக்கடி சோப்புப் போட்டு அல்லது கிருமி நாசினி கொண்டு சுத்தம் செய்தல் போன்ற தடுப்பு நடவடிக்கைகளை பொதுமக்கள் தினமும் பின்பற்ற வேண்டும் என்று தலைமைச் செயலாளர் வேண்டுகோள் விடுத்துள்ளார்.