நாடு முழுவதும் கடந்த ஆண்டு கொரோனா பெரும் தொற்றின் காரணமாக அதிக உயிரிழப்புகள் ஏற்பட்டது. இதனால் கொரோனாவால் பாதிக்கப்பட்டு உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு கருணைத் தொகை ரூ.50,000 வழங்க வேண்டும் என்று உச்சநீதிமன்றத்தில் வழக்கு பதிவு செய்யப்பட்டது. அப்போது உச்ச நீதிமன்றம் கொரோனா நிவாரண நிதி குறைந்தபட்சம் ரூ.50,000, அதிகபட்சமாக எவ்வளவு வேண்டுமானாலும் வழங்கலாம் என்று உத்தரவிட்டது. அதன்படி அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கும் கொரோனாவால் உயிரிழந்தவர்களின் குடும்பங்களுக்கு நிவாரண நிதி ரூ.50,000 வழங்கி வருகின்றனர். அதனைப் போல தமிழகத்தில் கொரோனாவால் உயிரிழந்தோரின் குடும்பங்களுக்கு ரூ.50,000 வழங்க முடிவு செய்து அறிவிப்பு வெளியிடப்பட்டது.
அதன்படி திருவாரூர் மாவட்டத்தில் இதுவரை 697 பேர் கொரோனா பேரிடர் இழப்பீடு கோரி இணையம் மற்றும் நேரில் விண்ணப்பம் அளித்துள்ளனர். அதில் 506 பேர் குடும்பங்களுக்கு ரூ.50,000 ஆயிரம் நிவாரண நிதி வாரிசுதாரரின் வங்கி கணக்கில் வரவு வைக்கப்பட்டுள்ளது. 148 மனுக்கள் பரிசீலினையில் இருந்து வருகிறது. மற்ற மனுக்களில் ஒரு சில சிக்கல்கள் காரணமாக நிராகரிக்கப்பட்டுள்ளது. அவ்வாறு கொரோனா தொற்று இழப்பீடு கோரி விண்ணப்பிக்க விரும்புபவர்கள் கொரோனா பரிசோதனை சிகிச்சை ஆவணம், இறப்புக் காரணம் குறித்த சான்று, வாரிசு சான்று மற்றும் வங்கி கணக்கு விபரம் ஆகிய ஆவணங்களை அந்தந்த மாவட்ட ஆட்சியர் பேரிடர் மேலாண்மை பிரிவு அல்லது தொடர்புடைய வட்டாட்சியர் அலுவலகத்தில் விண்ணப்பம் அளிக்க வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.