முதல்வர் ஸ்டாலின் தலைமையிலான தமிழக அரசு விவசாயிகள் நலனில் அக்கறை காட்டவில்லை என எதிர்க்கட்சிகள் புகார் எழுப்பியுள்ளது. அதற்கு தமிழக வேளாண் துறை அமைச்சர் எம் ஆர் கே பன்னீர்செல்வம் தற்போது விளக்கம் கொடுத்துள்ளார். இது பற்றி அவர் வெளியிட்ட அறிக்கையில் கூறப்பட்டிருப்பதாவது, தமிழக முதலமைச்சரின் சீரிய முயற்சியினால் தமிழகத்தில் அனைத்து விவசாயிகளுக்கும் தேவையான உரம் சென்றடைய நடவடிக்கை எடுக்கப்பட்டிருக்கிறது. இன்றைய நிலவரப்படி யூரியா -90,947மெ.டன்,டி.ஏ.பி-55,628மெ.டன்,பொட்டாஷ்-33,867மெ.டன்,காம்ப்ளக்ஸ்-1,61,626மெ.டன் என்ற அளவில் இருப்பு இருக்கிறது.
விவசாயிகளின் நலன் கருதி உரத்தட்டுப்பாட்டினை நீக்குவதற்காக தமிழக முதல்வரின் அறிவுரையின்படி வேளாண்மை இயக்குனர் அலுவலகத்தில் உர உதவி மையம் அமைக்கப்பட்டுள்ளது. இதன்படி உரம் தொடர்பான புகார்கள் 9363440360 என்ற செல்போன் எண்ணிலும் வாட்சப்பிலும் புகார்கள் பெறப்பட்டு உடனுக்குடன் விவசாயிகளின் உரத் தேவை போர்க்கால அடிப்படையில் நிவர்த்தி செய்யப்பட்டு இருக்கிறது. போதுமான அளவு உரம் கையிருப்பு இருப்பதாலும் சீரிய முறையில் விநியோகிக்கப்பட்டு வருவதாலும் விவசாயிகள் உரத்தை அதிக விலை கொடுத்து வாங்க வேண்டிய நிலை ஏதுமில்லை சாகுபடி பரப்பு அதிகரித்த அதே வேலையில் கூட்டுறவு வேளாண் கடன்கள் வழங்கப்படவில்லை என உண்மைக்கு புறம்பான தகவல்களை பரப்பி வருகின்றனர்.
கூட்டுறவு சங்கங்கள் மூலமாக இந்த வருடத்தில் மட்டுமே 6,04,060 விவசாயிகளுக்கு ரூபாய் 4, 566.13 கோடி அளவிற்கு கடன்கள் வழங்கப்பட்டிருக்கிறது. அதேபோல டெல்டா மாவட்டங்களில் மட்டும் ரூபாய் 603.50 கோடி அளவிற்கு 87,768 விவசாயிகளுக்கு பயிர் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. இதே காலகட்டத்தில் எடப்பாடி பழனிச்சாமி ஆட்சியில் 4,87, 640 விவசாயிகளுக்கு 3814.19 கோடி ரூபாய் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. டெல்டா மாவட்டங்களில் 63, 398 விவசாயிகளுக்கு 427.05 கோடி ரூபாய் வரை பயிர் கடன் வழங்கப்பட்டிருக்கிறது. மேலும் தற்போதைய திமுக அரசு ஆட்சி பொறுப்பேற்ற பின் கடந்த ஒன்றரை வருடங்களில் 98,968 புதிய விவசாயிகள் வேளாண் கூட்டுறவு சங்கங்களில் உறுப்பினர்களாக சேர்ந்து இருக்கின்றனர். இந்த நிலையில் இவர்களில் 77,005வேளாண் பெருங்குடி மக்களுக்கு ரூபாய் 523.67 கோடி அளவிற்கு விவசாய கடன்கள் பெற்று இருக்கின்றனர். விவசாயத்திற்கு என தனியார் வங்கிகளிடமிருந்து அதிக வட்டி கொடுத்து கடன் வாங்கும் சூழல் ஏற்படவில்லை சென்ற வருடத்தை விட கூடுதலாக 217.26 கோடி அளவில் 29,790 விவசாயிகளுக்கு கடன் உதவி அளிக்கப்பட்டுள்ளது.