தமிழக சட்டப்பேரவையில் ஏற்கனவே அறிவித்தபடி வருவாய்த் துறையைச் சேர்ந்த 108 பணியிடங்களை இந்து சமய அறநிலையத் துறையில் புதிதாக உருவாக்கிய தமிழக அரசு உத்தரவிட்டுள்ளது. அதில், தமிழகத்தில் இந்து சமய அறநிலையத்துறை கட்டுப்பாட்டில் உள்ள அற நிறுவனங்கள் மற்றும் திருமடங்களுக்கு சொந்தமான சொத்து விவரங்கள் அனைத்தும் தேசிய தகவல் தொகுப்பு மையம் மூலமாக வருவாய்த்துறை ஆவணங்களோடு சரிபார்த்து ஒப்பு நோக்கும் பணியும் நடந்து கொண்டிருக்கிறது. வருவாய் துறை ஆவணங்களோடு முழுமையாக ஒத்துப் போகும் நிலங்கள் இந்து சமய அறநிலையத் துறையின் இணையதளத்தில் பொதுமக்கள் பார்வையிடும் வகையில் வெளியிடப்பட்டுள்ளது.
மேலும் அற நிறுவனங்களின் சொத்து பதிவேடு விவரம், அசையா சொத்துக்களை குத்தகைக்கு அல்லது வாடகைக்கு வழங்கப்பட்ட விவரம், வாடகைத் தொகை விவரம், வாடகை தொகை செலுத்தாமல் பாக்கி வைத்துள்ளவர்கள் விவரம் ஆகியவை கோர்ட்டு உத்தரவின்பேரில் இணையத்தில் பதிவேற்றும் நடவடிக்கைகளும், அசையா சொத்து விவரங்களை தொகுதியை உருவாக்கும் நடவடிக்கையும் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகள் அனைத்தும் வருவாய்த்துறையுடன் ஒருங்கிணைத்து செய்ய வேண்டியுள்ளது.
எனவே உதவி ஆணையர்களுடன் இணைந்து தாசில்தார் நிலையிலான ஒரு வருவாய்த்துறை அலுவலர் ஈடுபடுத்துவது, இந்த பணிகளை விரைவாக முடிக்க உதவும் என்பதால் இந்து சமய அறநிலையத் துறையில் மாவட்ட அளவிலான 36 உதவி ஆணையர் அலுவலகங்களிலும் தலா ஒரு தாசில்தார் பணியிடம் புதிதாக ஏற்படுத்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வாறு புதிதாக ஏற்படுத்தப்படும் தாசில்தார் பணியிடங்களை வருவாய்த்துறை மூலம் அந்தந்த மாவட்ட அலுவலகத்தில் இருந்து பணி மாற்றம் மூலம் நியமனம் செய்ய அரசு திட்டமிட்டுள்ளது. தாசில்தார் களுக்கு உதவியாக ஒரு தட்டச்சர் வீதம் 36 தட்டச்சர்களும், ஒரு அலுவலக உதவியாளர் வீதம் 36 அலுவலக உதவியாளர் பணியிடங்களை ஏற்படுத்த அரசு உத்தரவிட்டுள்ளது.