தமிழகத்தில் நடந்து முடிந்த சட்டப்பேரவைத் தேர்தலில் திமுக அதிக இடங்களில் வெற்றி பெற்று ஆட்சி அமைத்தது. திமுக ஆட்சி அமைத்து ஒரு மாதமாக நிறைவடைய உள்ள நிலையில், 16-வது சட்டமன்றத்திற்கான முதல் கூட்டத்தொடர் இன்று ஆளுநர் உரையுடன் தொடங்கப்பட்டது. கொரோனா காரணமாக கலைவாணர் அரங்கத்தில் கூட்டத்தொடர் நடைபெற்றது. அப்போது ஆளுநர் பன்வாரிலால் புரோகித்தை , சபாநாயகர் மு.அப்பாவு வரவேற்றார். இதையடுத்து ஆளுநர் தனது உரையைத் தொடங்கினார்.
முதலில் தமிழ் மொழி மிகவும் இனிமையான மொழி என்று கூறி தனது உரையை ஆரம்பித்தார். இந்த கூட்டத்தில் முதல்வர் மு.க ஸ்டாலின் மற்றும் திமுக அமைச்சர்கள் எதிர்க்கட்சித் தலைவர்கள் என்று அனைத்து சட்டமன்ற உறுப்பினர்களும் பங்கேற்றனர். இன்றைய ஆளுநர் உரையில் பல முக்கிய அம்சங்கள் அறிவிக்கப்பட்டன.
2020-ல் ஒன்றிய அரசு இயற்றிய 3 வேளாண் செய்ய தீர்மானம் நிறைவேற்றப்படும்.
வேலைக்கு செல்லும் பெண்களுக்கு மாவட்டந்தோறும் தங்கும் விடுதிகள் அமைக்கப்படும்.
புதிய ரேஷன் அட்டை விண்ணப்பித்தால் 15 நாட்களில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்படும்.
கோயில் நிதி, நிலங்கள் மற்றும் சொத்துக்களின் தணிக்கை செயல்முறைகள் பாதுகாக்கப்படும்.
நிதி நிறுவனங்களில் கடன்பெறுவதற்கு சொத்து ஆவணங்களை அடமானம் வைக்கும் பத்திரப்பதிவு முத்திரைத் தீர்வையிலிருந்து டிசம்பர் மாதம் வரை விலக்கு அளிக்கப்படும்.
தொழில் நிறுவனங்களில் பணியாளர்களால் செலுத்தப்படும் தொழில் வரி செலுத்துவதற்கான கால அவகாசம் 3 மாதம் நீட்டிக்கப்படும்.
தென் மாவட்டங்களில் தொழில் வளர்ச்சியை மேம்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும்.
நிலத்தடி நீர் பயன்பாட்டை முறைப்படுத்த புதிய சட்டம் இயற்றப்படும்.
திரவ மருத்துவ ஆக்ஸிஜன் வழங்க ரூபாய் 50 கோடி, 3ம் அலை முன்னேற்பாடு நடவடிக்கைகளுக்கு ரூபாய் 50 கோடி ஒதுக்கப்படும்.
கலைஞர் பெயரில் ரூபாய் 70 கோடியில் மதுரையில் சர்வதேச தரத்தில் நவீன பொது நூலகம் கட்டும் பணிகள் விரைவில் தொடங்கப்படும்.
தமிழகத்தில் கட்டப்பட்டு வரும் 11 மருத்துவ கல்லூரிகளுக்கான பணிகள் விரைவில் முடிக்கப்படும்