உலகம் முழுவதிலும் இன்று ஆங்கிலப் புத்தாண்டு தினம் கொண்டாடப்பட்டு வருகிறது. கொரோனா மற்றும் ஒமிக்ரான் தொற்று காரணமாக பெரிய அளவிலான கொண்டாட்டங்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆகவே கோயில் வழிபாடு, வீடுகளில் சிறியதான கொண்டாட்டங்களில் பொதுமக்கள் ஈடுபட்டு வருகின்றனர். இதனிடையில் முதல்வர், அமைச்சர்கள், அரசியல் பிரபலங்கள், அதிகாரிகள் போன்றோர் பொதுமக்களுக்கு புத்தாண்டு வாழ்த்துகளை தெரிவித்து வருகின்றனர்.
அந்த அடிப்படையில் தமிழக டிஜிபி சைலேந்திரபாபு அவர்கள் வீடியோ ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில் “அனைவருக்கும் இனிய புத்தாண்டு நல்வாழ்த்துகள். இந்த புத்தாண்டு கொண்டாட்டம் அமைதியாகவும், பாதுகாப்பாகவும் இருக்க வேண்டும் என்று வாழ்த்துகிறேன். கடந்த ஆண்டு என்னவெல்லாம் செய்தோம். எதையெல்லாம் செய்ய தவறவிட்டோம். இந்த புதிய ஆண்டில் எதையெல்லாம் செய்ய வேண்டும். எந்த பழக்கங்களை புதிதாக கற்றுக் கொள்ள வேண்டும். கைவிட வேண்டும் என்று சிந்திக்கக் கூடிய நாள் தான் இந்த புத்தாண்டு ஆகும்.
இதில் இளைஞர்களை பொறுத்தவரையிலும் இந்த புத்தாண்டில் ஒரு செய்தி இருக்கிறது. உங்களிடம் ஒரு கேள்வி என்னவென்றால் நடந்த முடிந்த புத்தாண்டில் தொழில் ரீதியாக என்ன கற்றுக் கொண்டீர்கள். புதிய மொழியை கற்றுக் கொண்டீர்களா? இது போன்ற பல கேள்விகளை கேட்டுவிட்டு, இளைஞர்கள் ஏதாவது ஒரு கலையை கற்றுக் கொள்ள வேண்டும். அது தொழில்ரீதியாகவும் இருக்க வேண்டும். அதுவே இளைஞர்களின் வாழ்க்கைக்கு முக்கியமானதாக இருக்கும். நம் வாழ்க்கையின் மிகப்பெரிய பகுதியை நாம் செய்யும் தொழில் தான் தீர்மானிக்கிறது. ஆகவே செய்யும் தொழிலே தெய்வம்” என்று முடித்துள்ளார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் பெரிதும் வைரலாகி வருகிறது.
தமிழக டிஜிபி சைலேந்திரபாபு ஐபிஎஸ் அவர்கள், இளைஞர்கள், பொதுமக்களுக்கு விழிப்புணர்வு ஊட்டும் அடிப்படையில் அவ்வப்போது வீடியோக்களை வெளியிட்டு வருகிறார். மேலும் உடற்பயிற்சி கூடங்களில், சைக்கிளிங் பயணங்களில் உடற்பயிற்சியின் முக்கியத்துவம் தொடர்பான பல்வேறு வீடியோக்களை அவர் வெளியிட்டுள்ளார். அந்த வகையில் புத்தாண்டு தினத்தில் இளைஞர்கள் ஏதேனும் ஒரு தொழிற்கலையை கற்க வலியுறுத்தி இருப்பது மிகுந்த முக்கியத்துவம் பெற்றுள்ளது.