தமிழகத்தில் கொரோனா தொற்று காரணமாக மக்கள் வேலைகளை இழந்து பொருளாதார ரீதியாக சிரமப்பட்டு வருகின்றனர். அதிலும் குறிப்பாக கல்லூரிப் படிப்பை முடித்த இளைஞர்கள் வேலைவாய்ப்பின்றி அதிகம் பாதிக்கப்பட்டுள்ளனர். தற்போது அரசு ஊரடங்கில் தளர்வுகளை அறிவித்து மக்கள் இயல்பு நிலைக்கு திரும்பி வரும் நிலையில், வேலை இழந்தோருக்கு உதவும் அடிப்படையில் மாவட்டந்தோறும் வேலைவாய்ப்பு முகாம்களை நடத்த அனுமதி வழங்கியது. அதன்பின் மாவட்ட வேலைவாய்ப்பு மற்றும் தொழில்நெறி மையத்தில் வேலைவாய்ப்பு முகாம்கள் நடைபெற்றது.
இதில் பல்வேறு தனியார் நிறுவனங்கள் பங்கேற்று படித்த இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை அளித்தனர். தற்போது அரசு துறை பணி இடங்களுக்கான போட்டி தேர்வுகள் தொடர்பான அறிவிப்பும் வெளியாகியுள்ளது. இந்நிலையில் முதல்வர் ஸ்டாலின் அலுவலகத்தில் புத்தாய்வு திட்டத்தின் கீழ் இளைஞர்களை பணியில் அமர்த்த முடிவு செய்யப்பட்டுள்ளது. இது தொடர்பான அதிகாரப்பூர்வ அரசாணையும் வெளியிடப்பட்டுள்ளது. அதாவது இளைஞர்களுக்கு தொழில்முறை மற்றும் கல்வி அடிப்படையில் 2 ஆண்டு காலம் ஊக்க ஊதியத்துடன் பயிற்சி வழங்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த புத்தாய்வு திட்டத்தில் 2022ஆம் ஆண்டில் 30 இளைஞர்களை தேர்ந்தெடுத்து பயிற்சி அளிக்கப்பட இருக்கின்றனர். மேலும் இத்திட்டத்திற்கு ரூபாய் 5.66 கோடி ஒதுக்கப்படும் என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது. இதில் தேர்வாகும் இளைஞர்கள் முதல்வர் அலுவலகம் மற்றும் தமிழக அரசின் முதன்மை திட்டங்களை செயல்படுத்தும் பணிகளை மேற்கொள்வார்கள் எனவும் அரசு தெரிவித்துள்ளது. இந்த அறிவிப்பு இளைஞர்கள் இடையே மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.