தமிழகத்தில் பொறியியல் மற்றும் கலை அறிவியல் உள்ளிட்ட உயர்கல்வி நிறுவனங்களில் பயிலும் மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தாமல் நேரடித் தேர்வாக நடத்தப்படும் என்று உயர் கல்வித்துறை அறிவித்தது. இதையடுத்து கல்லூரி செமஸ்டர் தேர்வுகளை ஆன்லைன் மூலம் நடத்தக்கோரி மாணவர்கள் போராட்டம் நடத்தியதை அடுத்து மாணவர்கள் தேர்வுக்கு தயாராக 2 மாத கால அவகாசம் அளிக்கப்பட்டு, ஜனவரி 20ஆம் தேதி முதல் நடைபெறும் என தமிழக அரசு அறிவித்திருந்தது. ஆனால் கொரோனா தொற்று பரவல் அதிகரித்ததன் காரணமாக தேர்வுகள் அனைத்தும் மறுபடியும் ஒத்திவைக்கப்பட்டது.
இந்நிலையில் அண்ணா பல்கலைக்கழகத்தின் கீழ் செயல்படும் பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவர்களுக்கான நவம்பர்- டிசம்பர் மாத பருவத் தேர்வு ஆன்லைன் மூலம் பிப்..1-ம் தேதி முதல் தொடங்கியது. சென்னை பல்கலைக்கழகத்தில் பயிலும் மாணவர்களுக்கு நடப்பு பருவத் தேர்வுகள் நேற்று முதல் ஆன்லைனில் நடைபெற்று வருகின்றன. அதுமட்டுமல்லாமல் தேர்வு கால அட்டவணையில் ஞாயிற்றுக்கிழமைகளிலும் பருவத்தேர்வுகள் நடைபெறும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. ஏனென்றால் தாமதம் ஏற்பட்டதால், விரைவில் தேர்வுகளை நடத்தி முடிக்கும் அடிப்படையில் ஞாயிற்றுக்கிழமைகளும் ஆன்லைன் மூலம் தேர்வு நடத்தப்படும்.
இது தொடர்பாக சென்னைப் பல்கலைக்கழக துணைவேந்தர் கௌரி கூறியபோது, மாணவர்களுக்கு ஆன்லைன் வாயிலாக தேர்வு நடத்தப்படுவதால் ஞாயிற்றுக்கிழமை நாட்களிலும் தேர்வு நடத்தப்படுகிறது. சென்னைப் பல்கலைக்கழகம் உட்பட அனைத்து பல்கலைக் கழகங்களுக்கும் விரைவில் தேர்வுகளை நடத்தி முடிக்கும்படி உயர் கல்வித்துறை உத்தரவிட்டதன்படி ஞாயிற்றுக்கிழமைகளிலும் தேர்வுகள் நடைபெறுகின்றன. இதில் அரியர் மாணவர்களை தவிர, நடப்புக் கல்வி ஆண்டில் பயிலும் மற்ற மாணவர்களுக்கு ஞாயிற்றுக்கிழமை தேர்வு இல்லை” என்று கூறியுள்ளார்..