இப்போது சித்திரை மாதம் என்பதால் தமிழ்நாட்டின் பல மாவட்டங்களிலுள்ள கிராமங்களில் கோவில்களில் சித்திரை திருவிழாக்கள் நடந்து வருகிறது. இந்த திருவிழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சிகள் நடத்தப்படுவது வழக்கம் ஆகும். அவ்வாறு ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்தப்படுவதால் ஒருசில இடங்களில் சட்டஒழுங்கு பிரச்னை ஏற்படுவதாலும், கொரோனா தொற்றை கருத்தில் கொண்டும் காவல்துறையினர் அந்த நிகழ்ச்சி நடத்த அனுமதிப்பதில்லை. இதன் காரணமாக கோவில் விழாக்களில் ஆடல், பாடல் நிகழ்ச்சி நடத்த அனுமதிக்க தரக்கோரி மதுரை, தேனி, திண்டுக்கல், விருதுநகர் சிவகங்கை மாவட்டங்களிலிருந்து பல மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டது.
இந்த மனுக்களை விசாரித்த நீதிபதி ரமேஷ் கூறியதாவது, ஆடல்,பாடல் நிகழ்ச்சிகளை மாலை 8மணிக்கு தொடங்கி இரவு 11 மணிக்குள் முடித்துக்கொள்ள வேண்டும். அதன்பின் ஆபாசமான வார்த்தைகளும், நடனங்களும் இருக்கக்கூடாது. கொரோனா காலம் என்பதால் நிகழ்ச்சியில் கலந்துகொள்ளும் அனைவரும் மாஸ்க் அணிந்துகொள்ள வேண்டும். அத்துடன் சமூக இடைவெளியை கடைபிடிக்க வேண்டும் உள்ளிட்ட நிபந்தனைகளுடன் ஆடல் பாடல் நிகழ்ச்சிக்கு அனுமதி வழங்கி உத்தரவிட்டு வழக்கை முடித்து வைத்தார்.