Categories
மாநில செய்திகள்

தமிழக கோவில் நிலம் அபகரிப்பு…. நடவடிக்கை எடுக்காத அதிகாரிகள்…. உயர்நீதிமன்றம் அதிரடி….!!!!

தமிழகத்தில் அரசு நிலங்கள், நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றும் பணிகளில் அரசு செயல்பட்டு வருகிறது. இந்த நிலையில் ஆக்கிரமிப்பு அகற்றும் நடவடிக்கையாக இந்து கோவில்களை மட்டும் இடிப்பதாக கூறி இந்து முன்னணி அமைப்பின் மாநில செய்தித் தொடர்பாளர் இளங்கோ சென்னை உயர் நீதிமன்றத்தில் மனுத் தாக்கல் செய்துள்ளார். அந்த மனுவில், தமிழகத்தில் நீர்நிலைகளில் 4 லட்சத்து 40 ஆயிரத்து 927 ஆக்கிரமிப்புகள் உள்ளதாக தமிழக அரசு தாக்கல் செய்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் நீர்நிலை நிலங்களை ஆக்கிரமித்து 10 ஆயிரத்து 556 ஏக்கரில் குடியிருப்புகளும், 1,500 ஏக்கர் வணிக நிறுவனங்களும், 30 ஆயிரத்து 24 ஏக்கர் நிலம் விவசாயத்திற்கும் பயன்படுத்தப்படுவதாகவும், அதிலும் குறிப்பாக 1,311 ஏக்கர் நிலங்களை ஆக்கிரமித்து அரசு கட்டிடங்கள் கட்டப்பட்டுள்ளதாகவும் சுட்டிக் காட்டியுள்ளார்.

இதில் இந்து கோவில்களை மட்டும் அரசு இடித்து வருவதாகவும், அண்மை காலத்தில் மட்டும் 200க்கும் மேற்பட்ட கோவில்கள் இடிக்கப்பட்டுள்ளதாகவும், நூற்றாண்டுகள் பழமையான கோவில்களும் இடிக்கப்படுவதாகவும் அவர் தனது மனுவில் குற்றம் சாட்டியுள்ளார். ஆகவே அரசு நிலங்களிலுள்ள கோவில்கள், பிற மத வழிபாட்டுத் தலங்களை முறைப்படுத்தவோ (அ) மாற்று இடங்களில் அமைக்கவோ உரிய திட்டத்தை வகுக்க அரசுக்கு உத்தரவிட வேண்டும் என்றும், இந்து கோவில்களை மட்டும் இடிக்கப்படுவதற்கு தடை விதிக்க வேண்டும் என்றும் அவர் மனுவில் குறிப்பிட்டுள்ளார். இவ்வாறு தாக்கல் செய்த மனு தலைமை நீதிபதியான முனீஷ்வர்நாத் பண்டாரி மற்றும் நீதிபதி பரத சக்கரவர்த்தி அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.

அப்போது மனுதாரர் சார்பாக ஆஜரான வழக்கறிஞர் ஆக்கிரமிப்பு நிலங்களிலுள்ள கோவில்களை முறைப்படுத்தவும், மாற்று இடம் ஒதுக்கவும் திட்டம் வகுக்கும்படி அனைத்து மாநில அரசுகளுக்கும் உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளதால் திட்டத்தை வகுக்காமல் கோவில்களை இடிக்க தடை விதிக்க வேண்டும் என்று வாதிட்டார். அதுமட்டுமல்லாமல் இந்து கோவில்களுக்கு எதிராக மட்டும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாகவும், பிற வழிபாட்டுத் தலங்களுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் வாதிட்டார். இதனை ஏற்க மறுத்த நீதிபதிகள் உச்ச நீதிமன்ற உத்தரவில் நீர்நிலைகள் பற்றி குறிப்பிடவில்லை என்றும், இந்து கோவில்கள் மீது மட்டும் நடவடிக்கை எடுக்கப்படுவதாக எந்த ஆதாரங்களும் இல்லை என்றும் தெரிவித்தனர்.

மேலும் இந்து கோவில்களுக்கு எதிராக மட்டும் பாரபட்சமாக நடவடிக்கை எடுக்கப்படுவது தொடர்பாக உரிய ஆதாரங்களுடன் விரிவான மனு தாக்கல் செய்ய மனுதாரர் தரப்புக்கு நீதிபதிகள் உத்தரவிட்டனர். அதுமட்டுமின்றி நீர்நிலைகளிலுள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும் எனவும் அதில் எந்தவித பாரபட்சமும் காட்ட கூடாது எனவும் குறிப்பிட்ட மத வழிப்பாட்டு தலங்கள் மீது பாரபட்சம் காட்டி இருப்பது தெரியவந்தால் அரசுக்கு தான் சிக்கல் என்று கருத்து தெரிவித்தனர். கோவில் நிலங்கள் ஆக்கிரமிப்புகளுக்கு எதிராக நடவடிக்கை மேற்கொள்ளாத இந்து சமய அறநிலையதுறை அதிகாரிகளுக்கு நீதிபதிகள் கண்டனம் தெரிவித்தனர். கடந்த 2003-2022ஆம் ஆண்டு வரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை எனவும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்காமல் ஆணையர், கடமை தவறுகிறார் எனவும் அதிருப்தி தெரிவித்து வழக்கின் விசாரணையை நீதிபதிகள் அடுத்த வாரத்துக்கு தள்ளி வைத்தனர்.

Categories

Tech |