தமிழகத்தில் இதுவரையிலும் நடைபெற்ற சட்டமன்றப் பொதுத் தேர்தல் முடிவுகள் பல்வேறு சுவையான சம்பவங்களை மக்களுக்கு அடையாளம் காட்டியுள்ளது. அந்த வகையில் கலைஞர் கருணாநிதி, புரட்சித்தலைவர் எம்ஜிஆர் என்ற இரு அரசியல் ஆளுமைகள் மக்கள் மன்றத்தில் தோல்வியை சந்திக்காத தலைவர்கள். ஆனால், பேரறிஞர் அண்ணா, பெருந்தலைவர் காமராஜர் தொடங்கி விஜயகாந்த் வரை தோல்வியை சந்தித்துள்ளனர். சட்டமன்ற வரலாற்றில் தோல்வியை சந்தித்த பிரபலங்கள் அவர்களின் வாக்கு வித்தியாசம் குறித்து விவரிக்கின்றது இந்த செய்தி தொகுப்பு.
1962 தேர்தலில் காஞ்சிபுரம் தொகுதியில் போட்டியிட்ட பேரறிஞர் அண்ணா காங்கிரஸ் வேட்பாளர் எஸ்.பி நடேச முதலியாரிடம் 9190 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். 1967 தேர்தலில் விருதுநகர் தொகுதியில் போட்டியிட்ட பெருந்தலைவர் காமராஜர் திமுக வேட்பாளர் பெ. சீனிவாசன் என்பவரிடம் 1285 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 1967 தேர்தலில் ஸ்ரீபெரும்புதூர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த தமிழக முதல்வர் எம். பக்தவத்சலம் திமுக வேட்பாளர் டி. ராஜரத்தினத்திடம் 8926 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
1977 தேர்தலில் அம்பாசமுத்திரம் தொகுதியில் போட்டியிட்ட கம்யூனிஸ்ட் தலைவர் ஆர். நல்லகண்ணு மார்க்சிஸ்ட் வேட்பாளர் ஈஸ்வரமூர்த்தியிடம் 1787 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார். 1989 தேர்தலில் திருவையாறு தொகுதியில் போட்டியிட்ட நடிகர்திலகம் சிவாஜிகணேசன் திமுக வேட்பாளர் துரை சந்திரசேகரிடம் 10,643 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார்.
1991 தேர்தலில் ராயபுரம் தொகுதியில் காங்கிரஸ் வேட்பாளராகப் போட்டியிட்ட குமரி அனந்தன் திமுக வேட்பாளர் வேதாச்சலத்திடம் 6758 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 1991 தேர்தலில் ஆயிரம்விளக்கு தொகுதியில் போட்டியிட்டு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் அதிமுக வேட்பாளர் கிருஷ்ணசாமியிடம் 16,971 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். 1996 தேர்தலில் பர்கூர் தொகுதியில் போட்டியிட்ட மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா திமுக வேட்பாளர் இ.ஜி. சுகவனத்திடம் 8366 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார்.
1996 தேர்தலில் விளாத்திகுளம் தொகுதியில் போட்டியிட்ட மதிமுக பொதுச்செயலாளர் வைகோ திமுக வேட்பாளர் கே.ரவிசங்கரிடம் 634 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப் போனார். 2001 தேர்தலில் ஒட்டப்பிடாரம் தொகுதியில் போட்டியிட்ட புதிய தமிழகம் கட்சியின் தலைவர் டாக்டர் கிருஷ்ணசாமி அதிமுக வேட்பாளர் ஏ.சிவபெருமானிடம் 651 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2006 சட்டமன்ற தேர்தலில் எடப்பாடி தொகுதியில் போட்டியிட்ட தமிழக முதல்வர் எடப்பாடி கே பழனிசாமி பாட்டாளி மக்கள் கட்சியின் தலைவர் காவேரியிடம் 6,345 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியடைந்தார்.
2016 தேர்தலில் பென்னாகரம் தொகுதியில் போட்டியிட்ட பாமகவின் இளைஞரணி இளைஞரணி தலைவர் அன்புமணி ராமதாஸ் திமுக வேட்பாளர் இன்பசேகரன் 18,446 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். 2016 சட்டமன்ற தேர்தலில் காட்டுமன்னார்கோயில் தொகுதியில் போட்டியிட்ட விடுதலை சிறுத்தைகள் கட்சித் தலைவர் தொல். திருமாவளவன் அதிமுக வேட்பாளர் முருகுமாறன்னிடம் 87 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வி அடைந்தார். 2016 தேர்தலில் உளுந்தூர்பேட்டை தொகுதியில் போட்டியிட்ட தேமுதிக வேட்பாளர் விஜயகாந்த் அதிமுக வேட்பாளர் குமர குருவிடம் 47,496 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்றுப்போனார். இந்த தொகுதியில் திமுக இரண்டாம் இடத்தை பிடித்தது குறிப்பிடத்தக்கது.