மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணம் தொடர்பாக விசாரிக்க ஆறுமுகசாமி ஆணையத்தை தமிழக அரசு அமைத்து இருந்தது. அதன் அறிக்கை நேற்று தமிழக சட்டமன்றத்தில் வைத்து விவாதிக்கப்பட்டது. அந்த அறிக்கையில் பல்வேறு தகவல்கள் வெளியாகி உள்ளன. இதில் ஜெயலலிதாவின் தோழியான சசிகலா கொடுத்த வாக்குமூலத்தில் இருப்பதாவது,
அக்கா ஜெயலலிதா மருத்துவமனையில் சிகிச்சை பெற்றபோது தமிழக நலனை கருதி தனது துறைகளை கவனிக்க திரு.ஓ.பன்னீர்செல்வத்தை நியமிக்க கழக மூத்த நிர்வாகிகளும், அமைச்சர்களும் என்னிடம் கூறினார்கள். அதன்பின் நானும் அக்காவிடம் அது பற்றி கேட்டேன். அக்காவும் உடனே சரி என்று கூறினார்.
அந்த அடிப்படையில் ஆளுநருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. தமிழக பொறுப்பு ஆளுநர் அதனை ஏற்றுக்கொண்டு 11/10/2016 அன்று உரிய ஆணை பிறப்பித்தார். அதன்படி அக்கா ஜெயலலிதா அவர்கள் முதல்வராக இருந்து பார்த்து வந்த துறைகளை ஓ.பன்னீர்செல்வம் கவனிக்க தொடங்கினார் என குறிப்பிட்டுள்ளார்.