தமிழகத்தில் அமைச்சர் பிறப்பித்த உத்தரவு விசைத்தறி நெசவாளர்களுக்கு பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் சங்கரன்கோவிலில் உள்ள தமிழக சுற்றுசூழல் அமைச்சரான மெய்யநாதனை தென்காசி தெற்கு மாவட்ட திமுக செயலாளரான சிவபத்மநாதன் தலைமையில் நெசவாளர்கள் கூட்டமைப்பு சார்ந்த நிர்வாகிகள் திடீரென்று சந்தித்து பேசியுள்ளனர். அப்போது அமைச்சரை சந்தித்து பேசியுள்ள அவர்கள், அமைச்சரிடம் நெசவுத்தொழில் நிலையை எடுத்துச் சொல்லி,பின் 3 மாத காலம் மின் இணைப்பை துண்டிக்காமல் இருக்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
மேலும் சாயப் பட்டறைகளில் இருந்து வெளியேறும் கழிவுநீரை சேகரிப்பதற்கான வசதியை ஏற்படுத்தித் தர வேண்டும் என கூறியுள்ளனர். இதனையடுத்து அவர்களுக்கு மறுமொழி கூறிய அமைச்சர், மத்திய மற்றும் மாநில அரசு நிதி மூலம் அரசு செலவிலேயே சாயப்பட்டறை கழிவுகளை சுத்திகரிக்கும் நிலையம் அமைத்து தரப்படும் என்று கூறி உத்தரவாதம் அளித்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து விசைத்தறி நெசவாளர்கள் இயக்கும் இயந்திரங்களுக்கு வழங்கப்படுகின்ற மின்சாரமானது, 3 மாத காலத்திற்கு துண்டிக்கப்படாது என்ற உத்தரவும் பிறப்பித்துள்ளார். இந்நிலையில் இச்செய்தி நெசவு தொழிலாளர்கள் மத்தியில் பெரும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.மேலும் இச்சந்திப்பில் முன்னாள் எம்எல்ஏ முத்துச்செல்வி மற்றும் மாஸ்டர் வீவர்ஸ் அசோசியேஷன் தலைவர் சுப்பிரமணியன் ஆகிய பலர் உடன் இருந்தனர்.