தர்மபுரி மாவட்டத்தில் உள்ள பென்னாகரத்தில் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வாலிபர் அரங்க மாநில அரசியல் பயிற்சி முகாம் ஒன்று நடந்துள்ளது. இம்முகாமில் சிறப்பு அழைப்பாளராக சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கலந்து கொண்டுள்ளார். அதன்பின் செய்தியாளர்களை அவர் சந்தித்து பேசியுள்ளதாவது, தமிழக அரசினுடைய ஒரு முழு ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை சட்டமன்றத்தில் தாக்கல் செய்துள்ளதாக தெரிவித்தார்.
மேலும் ஏற்கனவே நாங்கள் முதலமைச்சருக்கு இந்த பட்ஜெட் தொடர்பான சில முக்கிய அறிவிப்புகளை வெளியிட வேண்டுமென்று ஒரு வேண்டுகோள் விடுத்துள்ளோம். அதிலும் குறிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு புதிய பென்ஷன் திட்டமானது பலன் தராது என்ற காரணத்தினால் பழைய பென்ஷன் திட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்ற ஒரு கோரிக்கையும் வைத்து போராடி வருகிறார்கள். எனவே அந்தக் கோரிக்கையை அரசு இந்த நிதிநிலை அறிக்கையில் இடம்பெற்றுள்ள அறிவிப்பை வெளியிட வேண்டும் எனவும் அரசு போக்குவரத்து பணியிலிருந்து ஓய்வு பெற்றவர்களுக்கான ஓய்வூதியத்தை உடனடியாக வழங்க வேண்டும் என்ற கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
மேலும் மாற்றுத் திறனாளிகள் மற்றும் பெண்களுக்கு அறிவிக்கப்பட்டு இருக்கிற உதவித் தொகையான ரூ.1000-த்தை மேலும் உயர்த்தி தரவேண்டும். மேலும் தமிழ்நாட்டில் மிகவும் மோசமான நிலையில் உள்ள சிறு, குறு தொழில்களை பாதுகாப்பதற்கான நடவடிக்கைகளை தமிழக அரசு மேற்கொள்ள வேண்டும் என்று கூறியுள்ளார். இதையடுத்து கர்நாடகாவில் மேகதாது அணை விவகாரம் தொடர்பாக தமிழக அரசானது புதிய அணை கட்டுவதை தடுப்பதற்கு தேவையான அனைத்து கட்சி கூட்டத்தை கூட்டி நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்.
மேலும் சாதி என்ற பெயரில் நடக்கும் ஆவணப்பட கொலைகளை தடுப்பதற்கான புதிய சட்டம் ஒன்றை இயற்ற வேண்டும். இதனைத் தொடர்ந்து தமிழகத்திற்கு ஒன்றிய மோடி அரசு தர வேண்டிய ரூ.21 ஆயிரம் கோடியை விடுவிக்க வேண்டும். மேலும் தற்போது நடந்த உள்ளாட்சித் தேர்தலில் கூட்டணிக் கட்சிகளுக்கான ஒதுக்கீடுகளை திமுக வேட்பாளர்கள் ஒரு சில இடங்களில் ராஜினாமா செய்யாமல் உள்ளது தொடர்பாக தமிழக முதல்வர் உடனடி நடவடிக்கை எடுத்து, கூட்டணிக் கட்சியினரை வெற்றி பெற செய்ய வேண்டும். இவ்வாறு சிபிஎம் மாநில செயலாளர் பாலகிருஷ்ணன் கூறியுள்ளார்.