உலக நாடுகளில் கடந்த 2020 ஆம் ஆண்டு முதல் கொரோனா மக்களை ஆட்டிப்படைத்தது. இந்த வருடம் ஓரளவு கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் மக்கள் அனைவரும் இயல்பு வாழ்க்கைக்கு திரும்பியுள்ளனர். ஆனால் கடந்த சில நாட்களாகவே சீனா மற்றும் ஜப்பான் உள்ளிட்ட பல உலக நாடுகளில் புதிய வகை பி.எப் 7 கொரோனா வைரஸ் அதிவேகமாக பரவி வருவதால் அனைத்து மாநிலங்களிலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கையை மேற்கொள்ளுமாறு மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. அதே சமயம் விமான நிலையங்களில் கட்டுப்பாடு மற்றும் முக கவசம் என பல கட்டுப்பாடுகளை மத்திய அரசு அமல்படுத்தியுள்ளது.
அதனால் தமிழகத்திலும் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. அவ்வகையில் மக்கள் அனைவரும் முகக் கவசம் அணிந்து சமூக இடைவேளையை கடைபிடிக்க வேண்டும் என அரசு அறிவுறுத்தியுள்ளது. இதனைத் தொடர்ந்து பள்ளிகளுக்கு அரையாண்டு விடுமுறை தற்போது வழங்கப்பட்டுள்ளது. இந்த விடுமுறை முடிந்து பள்ளிகள் திறக்கப்படும் போது மாணவர்கள் முக கவசம் அணிய வேண்டுமா என்பது தொடர்பாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் ஆலோசனை நடத்த உள்ளார்.
அப்போது மாணவர்கள் முக கவசம் அணிவது தொடர்பாக சுகாதார துறையின் கருத்தை கேட்க முடிவு செய்யப்பட்டுள்ளது. பள்ளி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களை கொரோனா தொற்றிலிருந்து பாதுகாக்க சுகாதாரத்துறை மற்றும் அரசு அறிவுறுத்தலின்படி கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். அதே சமயம் அரசின் கட்டுப்பாடுகளை கடைபிடிப்பதற்கு பள்ளி கல்வித்துறை தயாராக உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.