மாணவர்களுக்கு கோடை விடுமுறை அளிப்பது குறித்து துறை ரீதியாக ஆலோசனை நடத்திய பின் முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.
தமிழகத்தில் கொரோனா பாதிப்பால் கடந்த 2 ஆண்டுகளாக மக்கள் சிக்கி தவித்து வந்த நிலையில், தற்போது படிப்படியாக இயல்பு நிலைக்கு திரும்பி வருகின்றது. இந்நிலையில் பள்ளி மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக பாடங்கள் நடத்தப்பட்ட நிலையில், தற்போது பள்ளிகளில் நேரடி வகுப்புகள் நடைபெற்று வருகின்றன. இதையடுத்து கடந்த 2 ஆண்டுகளாக 10 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பொதுத்தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், தற்போது தேர்வுகள் குறித்த அட்டவணை வெளியிடப்பட்டுள்ளது.
ஆகவே இது குறித்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் வெளியிட்டுள்ள அறிவிப்பின்படி, வருகின்ற மே மாதம் 6-ம் தேதி முதல் 30-ஆம் தேதி வரை 10-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத் தேர்வு நடைபெறும் எனவும் மே மாதம் 9 ஆம் தேதி முதல் 31ஆம் தேதி வரை 11ஆம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வும் மற்றும் மே மாதம் 5-ஆம் தேதி முதல் 28ம் தேதி வரை 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத் தேர்வும் நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதனைத் தொடர்ந்து 6 முதல் 9-ஆம் வகுப்பு மாணவர்களுக்கான இறுதி தேர்வானது மே மாதம் 5ஆம் தேதி முதல் 13-ஆம் தேதி வரை நடைபெறும். இதனால் 1 முதல் 5-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு, மே மாதம் 13ஆம் தேதி வரை பள்ளிகள் செயல்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனால் கோடை விடுமுறை குறித்த ஆலோசனையானது துறை ரீதியாக நடத்திய பின், முடிவு செய்யப்படும் என பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் தெரிவித்துள்ளார்.