தமிழகத்தில் தொடக்க மற்றும் நடுநிலைப்பள்ளிகளில் 50% தமிழ் வழி வகுப்புகள் கட்டாயமாக வேண்டும் என்று பள்ளிக் கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து தொடக்க கல்வி இயக்குனர் முதன்மை அதிகாரிகளுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார்.
அந்த சுற்றறிக்கையில் ஒன்று முதல் எட்டாம் வகுப்பு வரை உள்ள பள்ளிகளில் ஆங்கில வழிக்கல்வி தொடங்க அனுமதி கேட்கும் பள்ளிகள் அனைத்து நிபந்தனைகளையும் பரிசீலித்த பின்னரே அனுமதி வழங்க வேண்டும். இதையடுத்து ஆங்கில வழியில் பிரிவு துவங்குவதற்காக அனுமதி கேட்கும் பள்ளிகளில் 50% தமிழ் வழி இருந்தால் மட்டுமே பள்ளிகளுக்கு அனுமதி வழங்க வேண்டும்.
மேலும் ஒரு பள்ளியில் 4 பிரிவுகள் இருந்தால் அதில் இரண்டு பிரிவுகள் தமிழ் வழியும் மற்றும் இரண்டு பிரிவுகள் ஆங்கில வழியும் செயல்படலாம். அதனைப் போலவே மூன்று பிரிவுகள் இருந்தால் இரண்டு தமிழ்வழி பிரிவு மற்றும் ஒன்று மட்டுமே ஆங்கில வழியாக செயல்பட வேண்டும் என்று அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.