தமிழக பள்ளிக்கல்வி துறையின் கீழ் இயங்கும் அரசு பள்ளிகளின் ஆசிரியர்களுக்கு, வருடந்தோறும் விருப்ப இடமாறுதல் வழங்கப்படும். இதனிடையில் அரசு மேல்நிலைப் பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான இடமாறுதல், முதுநிலை ஆசிரியர்களுக்கு தலைமை ஆசிரியர் பதவி உயர்வு, நடுநிலை பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கான பதவி உயர்வு, பட்டதாரி ஆசிரியர்களுக்கான பணி நிரவல் உள்ளிட்ட மாறுதல்கள் முடிந்துள்ளன.
இதையடுத்து ஒவ்வொரு பதவிக்கும் பணியிட மாறுதல் கவுன்சிலிங் நடத்தப்பட்டு பிப்ரவரி 23ல் அனைத்து நடவடிக்கைகளும் முடிகின்றன. இந்த நிலையில் பணி நிரவல் என்ற நடவடிக்கையின் கீழ் அரசு உதவி பெறும் தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கு, அரசு பள்ளி ஆசிரியர்களாக இடம் மாறுதல் வழங்கப்படுகிறது. அதாவது மாணவர்களின் எண்ணிக்கை கம்மியாக உள்ள அரசு உதவி பெறக்கூடிய பள்ளிகளில், கூடுதலாகவுள்ள ஆசிரியைகளுக்கு அவரவர் வேலை பார்க்கும் மாவட்டங்களிலுள்ள அரசு பள்ளி காலி இடங்களில் இடம் மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
அதேபோன்று அரசு உதவி பெறும் பள்ளிகளில் இடங்கள் காலியாக இருந்தால் அதில் அரசு பள்ளி ஆசிரியர்களை மாறுதல் செய்யவும் நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக பள்ளிக்கல்வி அதிகாரிகள் தெரிவித்தனர். இந்த நடவடிக்கை மாணவர்கள் எண்ணிக்கை விகிதத்தை விட, அதிக ஆசிரியர்கள் இருக்கும் நிலையை மாற்றுவதற்கு முதன் முறையாக எடுக்கப்பட்டுள்ளது.