தமிழகத்தில் கொரோனா 2-வது அலையை தொடர்ந்து 3-வது அலை பாதிப்பு நடப்பு ஆண்டு ஜனவரி மாதத்தில் தொடங்கியது. கல்லூரிகள் மூடப்பட்டு ஆன்லைன் மூலம் வகுப்புகள் நடைபெற்றது. இதையடுத்து கொரோனா பாதிப்பு சற்று குறைந்த நிலையில் ஊரடங்கு கட்டுப்பாடுகளில் தளர்வுகள் அளித்து முதல்வர் மு.க.ஸ்டாலின் உத்தரவு பிறப்பித்தார்.
மேலும் பிப்.1 ஆம் தேதி முதல் கல்வி நிறுவனங்கள் திறக்கப்பட்டு தற்போது நேரடி வகுப்புகள் நடைபெற்று கொண்டிருக்கிறது. இதையடுத்து பள்ளிக்கல்வித்துறை பொதுத்தேர்வு எழுதும் மாணவர்களுக்கு விரைவில் பாடத்தை நடத்தி முடிக்க வேண்டும் என்று ஆசிரியர்களுக்கு உத்தரவு பிறப்பித்திருந்தது. மேலும் பல்வேறு வழிகாட்டு நெறிமுறைகளையும் அறிவுறுத்தியிருந்தது.
இந்த நிலையில் தமிழகத்தில் பள்ளி ஆசிரியர்களின் நடத்தை, கற்பித்தல் திறனை கண்காணிக்க உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் மதுரை கிளை உத்தரவு பிறப்பித்துள்ளது. மேலும் மாணவர்கள், பெற்றோரின் எதிர்பார்ப்புகளை ஆசிரியர்கள் பூர்த்தி செய்கிறார்களா ? என்பதை கவனிக்க வேண்டும். பள்ளிக்கு உள்ளேயும், வெளியேயும் ஆசிரியர் நடத்தையை கண்காணித்து அதிகாரிகளுக்கு அறிக்கை அனுப்ப வேண்டும் என்று கூறியுள்ளது.