தமிழகத்தில் கடந்த ஒன்றரை வருடங்களுக்கு பிறகு பள்ளிகள் திறக்கப்பட்டு நேரடி வகுப்புகள் நடந்து கொண்டிருக்கின்றன. ஆனால் தமிழகத்தில் தொடர் கனமழை காரணமாக பள்ளிகளுக்கு தொடர்ந்து விடுமுறை அளிக்கப்பட்டு வருகிறது. ஏற்கனவே பள்ளிகள் தாமதமாக திறக்கப்பட்டதால் மாணவர்களுக்கு பாடத்திட்டங்கள் குறைக்கப்பட்டுள்ளது. தற்போது தொடர் விடுமுறை காரணமாக மீதமுள்ள பாடங்களை நடத்தி முடிப்பதற்கு சிரமமாக உள்ளது. அதனால் இனி வரும் நாட்களில் சனிக்கிழமைகளில் பள்ளிகள் நடத்துவதற்கு அரசு திட்டமிட்டுள்ளது. கடந்த ஆண்டு கொரோனா காரணமாக தேர்வுகள் ரத்து செய்யப்பட்ட நிலையில், இந்த ஆண்டு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என்று அரசு தெரிவித்துள்ளது.
இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்து பேசிய பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, நடப்பு கல்வியாண்டு இறுதியில் தேர்வுகளை எதிர்கொள்ளும் வகையில் பாடத்திட்டம் 35 சதவீதம் முதல் 50 சதவீதம் வரை குறைக்கப்பட்டுள்ளது. இந்த ஆண்டு 10, 11, 12 ஆம் வகுப்பிற்கான பொதுத் தேர்வு தள்ளி போக வாய்ப்பில்லை. எனவே வழக்கம்போல மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் பொதுத் தேர்வு நடைபெறும். மே மாதம் கோடை விடுமுறை அளிக்கப்படும். தற்போது 10 மற்றும் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வு நடத்த பள்ளிக் கல்வித்துறை முடிவு செய்தது. அதற்கான பாடத்திட்டங்கள் அனைத்தும் தலைமை ஆசிரியர்களுக்கும் அனுப்ப நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் கூறியுள்ளார்.