தமிழகத்தில் கொரோனா பெருந்தொற்று காரணமாக மூடப்பட்டிருந்த பள்ளிகள் கடந்த ஆண்டு இறுதியில் மீண்டும் திறக்கப்பட்டது. இதற்கிடையில் கடந்த சில நாட்களாக மீண்டும் கொரோனா மற்றும் ஒமைக்ரான் பாதிப்பு தமிழகத்தில் அதிகரிக்கத் தொடங்கியுள்ளது. இதன் காரணமாக தமிழகத்தில் பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளன. பள்ளிகளை பொறுத்தவரையிலும் பொதுத் தேர்வை கருத்தில் கொண்டு, 10, 11 மற்றும் 12 ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு மட்டும் நேரடி வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. பிற வகுப்புகளை சேர்ந்த மாணவர்களுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. எனினும் கொரோனா தொற்று பரவல் அதிகமாக இருப்பதால், மாணவர்களின் நலன் கருதி அனைத்து வகுப்பு மாணவர்களுக்கும் வருகிற 31ஆம் தேதி வரை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது
இதற்கு முன்பாக கடந்த ஆண்டு பள்ளி மாணவர்களுக்கான பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டு அனைவரும் தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்பட்டது. ஆனால் இந்த வருடம் கண்டிப்பாக பொதுத்தேர்வு நடத்தப்படும் என்று தமிழக அரசு தெரிவித்துள்ளது. தற்போது கொரோனா மற்றும் ஒமைக்ரான் பரவல் காரணமாக பள்ளிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளதால் பொதுத்தேர்வுகள் நடைபெறுமா அல்லது கடந்த ஆண்டை போன்றே தேர்ச்சி பெற்றதாக அறிவிக்கப்படுமா என்ற எதிர்பார்ப்பு மாணவர்கள் மத்தியில் எழுந்துள்ளது. இந்நிலையில் மாணவர்களுக்கு பொதுத் தேர்வு குறித்து பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி விளக்கம் அளித்துள்ளார்.
புதுக்கோட்டை மாவட்டத்திலுள்ள கீரனூரில் அரசு பெண்கள் மேல்நிலைப் பள்ளி கூடுதல் வகுப்பறைகள் கட்டிட திறப்பு விழா நேற்று நடைபெற்றது. இந்நிகழ்ச்சியில் பள்ளிக் கல்வித்துறை அமைச்சரான அன்பில் மகேஷ் பொய்யாமொழி, சுற்றுச்சூழல் துறை அமைச்சரான மெய்யநாதன், சட்டத்துறை அமைச்சரான ரகுபதி போன்றோர் கலந்து கொண்டனர். அதன்பின் அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி செய்தியாளர்களை சந்தித்து பேசியபோது “கொரோனா பெருந்தொற்று காரணமாக ஜனவரி 31ஆம் தேதி வரையிலும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. பொதுத்தேர்வு எழுதக்கூடிய மாணவர்கள் இதனை விடுமுறை என்று நினைக்காமல், கல்வி தொலைக்காட்சி மற்றும் ஆசிரியர்கள் மூலமாக தமிழக அரசானது யூடியூபில் 8,000 வீடியோக்களை பதிவிறக்கம் செய்துள்ளது.
அதனை பார்த்து மாணவர்கள் பாடங்களை படிக்க வேண்டும். கல்வி தொலைக்காட்சி கடந்த ஆட்சிக் காலத்தில் துவங்கப்பட்டது என்றாலும், இந்த அரசு கல்வி தொலைக்காட்சியை எவ்வாறு மேம்படுத்துவது என்பது தொடர்பாக தகவல் தொழில் நுட்பத்துறையுடன் ஆலோசனை செய்து வருகிறது. இதனிடையில் நீட் தேர்வு வேண்டாம் என்பதுதான் தமிழக முதல்வர் மற்றும் அரசின் நிலைப்பாடு ஆகும் . இதற்காக விலக்கு வேண்டும் என சட்டப் போராட்டமானது ஒரு பக்கம் நடந்து கொண்டிருந்தாலும், மாணவர்களை தயார்படுத்துவதற்காக தமிழக அரசின் ஹைடெக் ஆய்வகம் மூலம் பல பகுதிகளில் பயிற்சிகள் அளிக்கப்பட்டு வருகிறது. அதனை விரிவுபடுத்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன” என்று அவர் பேசினார்.