தமிழகத்தில் கொரோனா 3- வது அலை காரணமாக மாணவர்களின் நலன் கருதி ஜனவரி 31 ம் தேதி வரை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டது. இந்த நிலையில் கொரோனா தொற்றை கட்டுப்படுத்த அரசு நோய் தடுப்பு பணிகளில் தீவிரம் காட்ட தொடங்கியது. அதன் பலனாக கொரோனா தொற்றின் தாக்கம் குறைந்து வந்ததால் ஊரடங்கு ரத்து செய்யப்பட்டு பள்ளிகள் திறக்க அனுமதி வழங்கப்பட்டது. அதன்படி கடந்த 1ஆம் தேதி முதல் மீண்டும் 1- 12 வரையிலான வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டுள்ளது. மேலும் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகளும் தற்போது நடைபெற்று வருகிறது.
இந்நிலையில் தமிழகத்தில் நகர்ப்புற உள்ளாட்சி தேர்தல் நடைபெறுவதை முன்னிட்டு பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்க இருப்பதாக தகவல் வந்துள்ளது. தமிழகத்தில் 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என்று 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளில் உள்ள 1,374 மாநகராட்சி உறுப்பினர்கள், 3,843 நகராட்சி உறுப்பினர்கள், 7,621 பேரூராட்சி உறுப்பினர்களை தேர்ந்தெடுப்பதற்கான தேர்தல் பிப்ரவரி 19ம் தேதி நடைபெற இருக்கிறது. இதையடுத்து வரும் 22ம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என்று தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது.
இதனால் பள்ளிகளுக்கு தேர்தல் நடைபெறும் நாளான (பிப்ரவரி 19) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. அதுமட்டுமல்லாமல் 50 சதவீதம் மேல் தேர்தல் பணியில் ஆசிரியர்கள் இருப்பின் அந்தப் பள்ளிகளுக்கு மட்டும் பிப்ரவரி 18ம் (இன்றும்) விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது. இவ்வாறு தொடர்ந்து 2 நாட்கள் விடுமுறை அறிவிக்கப்படுவதால் மாணவர்கள் மகிழ்ச்சியில் இருக்கின்றனர். ஆகவே பள்ளிகள் வாக்குப்பதிவு மையங்களாகவும், ஆசிரியர்கள் தேர்தல் பணி அலுவலர்களாகவும் செயல்படுவதால் விடுமுறையை தவிர்க்க இயலாது.