தமிழகத்தில் கடந்த ஆண்டு மார்ச் மாதம் கொரோனா அச்சுறுத்தல் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகள் அனைத்தும் மூடப்பட்டன. அதன் பிறகு சற்று கொரோனா பாதிப்பு குறைந்த நிலையில் 9 முதல் 12-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. ஆனால் பெரும்பாலான பள்ளிகளில் மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை அடுத்து,9 முதல் 11 ஆம் வகுப்பு மாணவர்கள் அனைவரும் தேர்வின்றி தேர்ச்சி செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டு விடுமுறை அளிக்கப்பட்டது. ஆனால் 12ஆம் வகுப்பு மாணவர்களுக்கு கட்டாயம் பொதுத் தேர்வு நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
அதனால் அவர்களுக்கு மட்டும் பள்ளிகள் திறக்கப்பட்டு வகுப்புகள் நடத்தப்பட்டு வந்தன. கடந்த வாரம் தமிழகம் முழுவதிலும் உள்ள அனைத்து பள்ளிகளிலும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு செய்முறை தேர்வு தொடங்கியது. இதனையடுத்து மே 5ஆம் தேதி பொதுத் தேர்வு நடைபெற இருந்த நிலையில், கொரோனா அச்சுறுத்தல் காரணமாக தேர்வுகள் ஒத்திவைக்கப்படுவதாக தமிழக அரசு அறிவித்தது.
இந்நிலையில் கற்றல் இடைவெளியை சரி செய்ய 1 முதல் 9 ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இணைப்புப் பாடப் பயிற்சி கட்டகமும், பயிற்சி புத்தகமும் உருவாக்கப்பட உள்ளதாக பள்ளிக் கல்வித்துறை அறிவித்துள்ளது. முதற்கட்டமாக இணைப்பு பாடப் பயிற்சி கட்டகம் ஏப்ரல் 22 – மே 10 வரை கல்வி தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்பட்ட உள்ளது. ஒரு வகுப்பிற்கு தினசரி இரண்டு காணொளிகள் வீதம் 1 – 9 ஆம் வகுப்புகளுக்கு ஒளிபரப்பு செய்யப்படும் என தெரிவித்துள்ளது.