மாணவர்களுக்கு விளையாட்டு மூலம் கணிதம் கற்கும் மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு உள்ளது.
திருச்சியில் மத்திய பேருந்து நிலையம் அருகே உள்ள தனியார் உணவகத்தில் விளையாட்டின் மூலம், கணிதம் கற்கும் அசத்தல் மென்பொருளின் அறிமுக விழா நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி பங்கேற்று, அந்த மென்பொருளை வெளியிட்டுள்ளார். அதன்பின் அமைச்சர் பேசியதாவது, கணிதம் என்பது கடுமையான பாடம் என்ற மனநிலை அதிக மாணவர்களின் மத்தியில் உள்ளது.
ஆனால் கணிதம் ஒரு தனித்துவமான பாடம் என்றும் ஒரு காலத்தில் கணித பாடத்திற்கு பெரும் முக்கியத்துவம் இல்லாமல் இருந்த நிலையில், தற்போது அனைத்து விதமான பயன்பாடுகளுக்கும், கணிதம் இல்லாமல் இல்லை என்ற ஒரு நிலை உருவாகி விட்டது. இதையடுத்து அரசு பள்ளியில், பொருட்களை கொண்டு பாடம் நடத்த முறையானது கிண்டர் கார்டன் முதல் அறிமுகம் செய்யப்பட்டு வருகிறது.
அந்த வகையில் தற்போது கணித பாடத்தை விளையாட்டு மூலம் கற்கும் முறை அறிமுகம் செய்திருப்பது வரவேற்கத்தக்கது என்று கூறியுள்ளார். மேலும் அரசு பள்ளிகளிடம் இருந்து தனியார் பள்ளிகள் அதிக விஷயங்களை கற்றுக் கொள்கின்றன. அதனை போல் அரசு பள்ளிகளும், தனியார் பள்ளிகளிடம் இருந்து பல்வேறு விஷயங்களை கற்று கொள்கின்றன. அந்த வகையில் எவ்வித போட்டி மனப்பான்மையும் கிடையாது.
இந்த அடிப்படையில் மாணவர்களின் நலனை கருத்தில் கொண்டு நாங்கள் பணியாற்றுகிறோம் என்று கூறியுள்ளார். அந்த வகையில் கல்வித்துறை, ஆசிரியர், பெற்றோர், மாணவர்கள், கல்வி நிறுவனங்கள் என அனைத்து துறைகளும் ஒன்றிணைந்து செயல்பட்டால் தான், கல்வி கற்கும் முறையை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்ல முடியும். இந்நிலையில் தனியார் பள்ளிகளுக்கு இணையாக அரசு பள்ளிகளை தரம் உயர்த்தும் முயற்சியானது நடந்து கொண்டிருக்கிறது.
ஆனால் அதற்கு சற்று காலதாமதம் ஏற்படலாம். ஆகவே தற்போது கணிதப் பாடத்திற்கு விளையாட்டு முறை மூலம் கற்கும் முறையான மென்பொருள் அறிமுகம் செய்யப்பட்டு இருப்பது போல் வேதியியல், இயற்பியல் போன்ற பாடங்களில் மாணவர்கள் எளிதில் கற்கும் வகையிலான திட்டங்களை கொண்டு வர முயற்சிக்க வேண்டும். இவ்வாறு அமைச்சர் கூறியுள்ளார்.