தமிழகத்தில் அரசு பள்ளிகளில் படிக்கும் 12 ஆம் வகுப்பு மாணவர்கள் நுழைவுத் தேர்வில் தேர்ச்சி பெற, வினாடி வினாக்களை நடத்த பள்ளிக்கல்வித்துறை திட்டமிட்டுள்ளது. வினாடி வினா 12 ஆம் வகுப்பு பாடப் புத்தகங்களின் அடிப்படையில் கொள்குறி வகை கேள்விகள் வடிவில் தயாரிக்கப்பட்டுள்ளன. மாணவர்கள் கணிதம், இயற்பியல், வேதியியல், தாவரவியல் மற்றும் விலங்கியல் ஆகிய பாடங்களில் வினாடி வினாக்களில் கலந்து கொள்ளலாம். தேர்வு நோக்கத்திலான இந்த வினாடி வினாக்கள் மாணவர்கள் பயிற்சி பெறவும், காலப்போக்கில் அவர்களின் திறன்களை மேம்படுத்த உதவும்.
இந்த முயற்சி தமிழக பள்ளி மாணவர்களை அவர்கள் விரும்பும் எந்த ஒரு போட்டித் தேர்வு அல்லது நுழைவுத் தேர்வையும் எதிர்கொள்ளும் வகையில் நன்கு தயார் படுத்த உதவும் என பள்ளிக்கல்வித்துறை சுற்றறிக்கை அனுப்பியுள்ளது.இதற்கிடையே அனைத்து அரசு மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் 12-ம் வகுப்பு மாணவர்களுக்கு உயர்கல்வி மற்றும் வேலை வாய்ப்பு சார்ந்து 4 நாட்கள் பல்துறை நிபுணர்களின் வழிகாட்டுதல் நிகழ்ச்சி நடத்த பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது.