தமிழகத்தில் நடப்பு கல்வி ஆண்டில் சனிக்கிழமை மாணவர்களுக்கு வகுப்புகள் இயங்காது என்று தமிழக பள்ளி கல்வித்துறை அறிவித்தது. இருப்பினும் சில பள்ளிகளில் விடுமுறை நாட்களிலும் மாணவர்களுக்கு வகுப்பு எடுக்கப்படுவதாக புகார்கள் எழுந்துள்ளது. இந்நிலையில் விடுமுறை நாட்களில் மாணவர்களுக்கு வகுப்புகள் எடுக்கக் கூடாது என்றும், மீறினாள் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என்று தமிழக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது. மேலும் சனி மற்றும் ஞாயிற்றுக்கிழமைகளில் மாணவர்களை பள்ளிக்கு வரவழைக்க கூடாது என்றும் பள்ளி வேலை நாட்களில் மட்டுமே மாணவர்கள் வரவேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. இதற்கிடையில் பள்ளி கல்வித்துறை முதன்மைச் செயலர் பள்ளிக் கல்வி, தொடக்க கல்வி மற்றும் தனியார் பள்ளிகள் இயக்குனர்களுக்கு சுற்றிக்கை ஒன்றை அனுப்பியுள்ளார்.
அதில், ஒரு குழந்தை சரியாக படிக்கவில்லை என்றால் கற்றல் குறைபாடு மதிப்பீடு செய்யப்பட வேண்டும். மேலும் அதில் ஏதேனும் குறைபாடுகள் கண்டறியப்பட்டால் சிறப்பு கல்வியாளரிடம் குழந்தையை அனுப்பி வைக்க வேண்டும். அதுமட்டுமில்லாமல் பள்ளி சொத்துகளுக்கு மாணவர்கள் சேதம் விளைவித்தால் அதற்கு பெற்றோரே பொறுப்பேற்று மாற்றி தர வேண்டும். இதனையடுத்து பள்ளிகளில் தவறு செய்யும் மாணவர்களுக்கு தகுந்த ஆலோசனை வழங்க வேண்டும் என்றும் தொடர்ந்து தவறு செய்து கொண்டிருந்தால் அருகில் உள்ள வேறொரு பள்ளிக்கு மாற்ற வேண்டும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் இந்த வழிகாட்டுதல்களை அனைத்து பள்ளி தலைமை ஆசிரியர்களுக்கு அனுப்பி வைத்து உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என்று உத்தரவிடப்பட்டுள்ளது.