வங்க கடலில் உருவான மாண்டஸ் புயல் நேற்று முன்தினம் நள்ளிரவு சென்னை மற்றும் மாமல்லபுரம் இடையே கரையை கடந்தது. புயல் கரையைக் கடந்ததால் நேற்று பெரும்பாலான மாவட்டங்களில் மழை கொட்டி தீர்த்தது. இதனிடையே புயல் இன்னும் தமிழகத்தை விட்டு செல்லவில்லை. வேலூர் அருகே 40 கிலோ மீட்டர் தொலைவில் புயல் வலுவிழந்து நிலை கொண்டு உள்ளதால் அடுத்த ஒரு மணி நேரத்திற்கு 17 மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில் புயல் பாதிப்பால் ஏற்பட்ட சேதங்களை சரி செய்யும் பணியில் தமிழக அரசு மும்முரமாக ஈடுபட்டு வரும் நிலையில் புயலால் அரசு பள்ளி மாணவர்களின் கல்வி உபகரணங்கள் சேதமடைந்து இருந்தால் புதிதாக வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். புயலால் சென்னை மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வீடுகள் பாதிப்படைந்துள்ளன. இதில் மாணவர்களின் புத்தகங்கள் மற்றும் சான்றிதழ்கள் உள்ளிட்டவை சேதமடைந்து இருப்பதாக பெற்றோர் தரப்பில் கூறப்பட்டது. இதனைத் தொடர்ந்து மாணவர்களுக்கு கல்வி உபகரணங்கள் வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என பள்ளி கல்வித்துறை தெரிவித்துள்ளது.